பொருள் வணிகம்

கோடையால் முட்டை உற்பத்தி சரிவு : தேசிய அளவில் விலை உயர்வு

கோடை துவங்கி விட்டதால், முட்டை உற்பத்தி குறைந்து வருகிறது; அதனால், நாமக்கல் மண்டலத்தில், கடந்த, 28 நாட்களில், முட்டை ஒன்று, 15 காசு வரை, விலை உயர்ந்துள்ளது. தேசிய அளவிலான முட்டை உற்பத்தியில், ஆந்திரா, தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட, மாநிலங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை; அந்தந்த பகுதியில் உள்ள, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் பரிந்துரைபடி, பண்ணை மற்றும் கொள்முதல் விலை, நிர்ணயம் செய்யப்படுகின்றன.உள்நாட்டு தேவை, வெளிநாட்டு ஏற்றுமதி,
உற்பத்தி செலவு மற்றும் நுகர்வை அடிப்படையாகக் கொண்டு, தினமும் முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விற்பனைக்கு வருகின்றன.

தற்போது, கோடை காலம் துவங்கி விட்டதால், முட்டைக் கோழி, வெப்பத்தை தாங்க முடியாமல் பல்வேறு நோய்களுக்கு ஆளாகுகின்றன. இதனால், முட்டை உற்பத்தி, சரிவை நோக்கிச் செல்கின்றன. வரும், ஜூன் வரை, கோடை காலம் இருப்பதால், பண்ணையாளர்கள், கோழி வளர்ப்பில், அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 28 நாளில், நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை, 15 காசு வரை உயர்ந்துள்ளது.

கடந்த, பிப்., 1ம் தேதி, 3.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, நேற்று முன் தின நிலவரப்படி, 3.45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. “கோடை துவங்கி விட்டதால், கோழிகள் முட்டையிடும் எண்ணிக்கை குறைந்து; மொத்த உற்பத்தி குறைந்து வருகிறது. வரும் நாட்களில், முட்டை விலை, தேவைக்கு ஏற்ப உயரும்’ என,
பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

தினமலர்

Leave a Reply