இறக்குமதி செய்திகள்

சமையல் எண்ணெய் இறக்குமதி 1,500 கோடி டாலரை எட்டும்

நடப்பு 2014-15-ஆம் நிதி ஆண்டில் சமையல் எண்ணெய் இறக்குமதி, மதிப்பு அடிப்படையில் 60 சதவீதம் அதிகரித்து 1,500 கோடி டாலரை எட்டும் என அசோசெம் அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ

எல் நினோ பருவநிலை மாற்றம் காரணமாக, தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் கரீப் பருவத்தில் (ஜூன்-அக்டோபர்) எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 10 சதவீதம் பாதிப்புக்கு உள்ளானதால் இறக்குமதி அதிகரிக்கும் என அசோசெம் தெரிவித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் 930 கோடி டாலருக்கு சமையல் எண்ணெய் இறக்குமதி செய்ப்பட்டது.

கரீப் பருவத்தில் பயிர் செய்யப்படும் முக்கிய எண்ணெய் வித்துக்களான சூரியகாந்தி, நிலக்கடலை மற்றும் சோயாபீன் உற்பத்தி முறையே 35 சதவீதம், 31 சதவீதம் மற்றும் 1 சதவீதம் குறைந்துள்ளது. அக்டோபர் நிலவரப்படி உள்நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் தேவைப்பாட்டில் 50 சதவீதத்திற்கும் மேல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி குறைந்ததால் சில மாநிலங்களில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. எனினும், 2014 ஏப்ரல் மாதத்திலிருந்து சில்லறை விற்பனையில் சமையல் எண்ணெய் விலை அதிகமாக உயரவில்லை என அசோசெம் பொதுச் செயலாளர் டீ.எஸ்.ராவத் தெரிவித்தார்.

இரண்டாவது இடம்

சமையல் எண்ணெய் இறக்குமதியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. மக்கள்தொகை அதிகரிப்பால் தேவைப்பாடு உயர்ந்து வருவதே இதற்கு காரணமாகும்.

Leave a Reply