காபி & தேயிலை

சர்வதேச மந்தநிலையால் தேயிலை ஏற்றுமதி 13.24% குறைந்தது

சர்வதேச சந்தைகளில் தேவைப்பாடு குறைந்துள்ளதால், நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் -பிப்ரவரி) இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் 13.24 சதவீதம் சரிந்து 69.56 கோடி டாலராக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் 80.18 கோடி டாலராக இருந்தது. நிதி ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி மிகவும் குறைந்ததே இதற்கு காரணமாகும்.

பாகிஸ்தான்

இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் தேயிலைக்கான தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. இந்திய தேயிலை ஏற்றுமதிக்கு இது சாதகமான அம்சமாகும். ஏனென்றால் சர்வதேச அளவில் தேயிலை இறக்குமதி செய்வதில் அந்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் தேயிலை நுகர்வு 22 கோடி கிலோவாக உள்ளது. மேலும் ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலும் தேயிலைக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளது. இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் பிப்ரவரி மாதத்தில் தேயிலை ஏற்றுமதி 12.36 சதவீதம் அதிகரித்து 5.77 கோடி டாலரிலிருந்து 6.49 கோடி டாலராக அதிகரித்துள்ளது. எனவே வரும் மாதங்களிலும் இந்திய தேயிலை ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்ற 2012-13-ஆம் நிதி ஆண்டில் அளவின் அடிப்படையில் தேயிலை ஏற்றுமதி 21.62 கோடி கிலோவாக இருந்தது. அந்த நிதி ஆண்டில் உற்பத்தி 113.50 கோடி கிலோவாக இருந்தது. ஆக, உற்பத்தியாகும் தேயிலையில் சுமார் 20 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. நம் நாட்டில் தேயிலை நுகர்வு அதிகமாக உள்ளதே இதற்கு காரணமாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஏப்ரல்-ஜனவரி) உற்பத்தி 113.76 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. எனவே நடப்பு நிதி ஆண்டில் தேயிலை உற்பத்தி சென்ற ஆண்டைக் காட்டிலும் அதிகரிக்கும்.

உற்பத்தி

நாட்டின் தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது. தென்னிந்தியாவில் தேயிலை உற்பத்தியில் கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில் நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் நுகர்வில் முதல் இடத்தில் உள்ளது.

காமன்வெல்த் நாடுகள், இங்கிலாந்து, ஈராக் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவின் முக்கிய தேயிலை ஏற்றுமதி சந்தைகளாகும்.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply