பருத்தி பஞ்சு & நூல்

சீனாவின் புதிய கொள்கையால் பருத்தி நூல் ஏற்றுமதி 25 சதவீதம் குறைந்தது

சீனாவில் புதிய ஜவுளி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டுக்கான நூல் ஏற்றுமதி ஆதாயமற்றதாகியுள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த நூல் ஏற்றுமதி 25 சதவீதம் குறைந்துள்ளது.

உள்நாட்டில் தற்போது பருத்தி நூலுக்கான தேவைப்பாடு உயரத் தொடங்கியுள்ளது. எனினும் தேவைப்பாடு முழு வீச்சில் அதிகரிக்க இன்னும் சிறிது காலமாகும் என ஜவுளி ஆலைகள் தெரிவித்துள்ளன. இது ஓர் இடர்பாடாக உள்ளது. ஏனென்றால் 2009- 10 – ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் நெருக்கடியிலிருந்து ஜவுளி நிறுவனங்கள் இப்போதுதான் மீண்டு வந்துள்ளன.

இது குறித்து வர்தமான் குழுமத்தின் தலைவர் எஸ்.பி.ஆஸ்வால் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 12 கோடி கிலோ நூல் ஏற்றுமதியாகியுள்ளது. சீனாவின் தேவைப்பாடுதான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் 9 கோடி கிலோ மட்டுமே நூல் ஏற்றுமதியாகி உள்ளது. சீனாவின் புதிய கொள்கையால் ஏற்றுமதிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் நமது நூல் ஏற்றுமதியில் சீனாவின் பங்கு ஏறக்குறைய 50 சதவீதமாக இருந்தது’’ என்று தெரிவித்தார்.

Leave a Reply