வணிகச் செய்திகள்

சீனாவைக் காட்டிலும் இந்திய பொருள்களின் தரம் நன்றாக உள்ளது

உள்நாட்டு சந்தையில் சீன பொருள்களின் வரத்து அதிகமாக உள்ளது. அதேசமயம், இந்திய சிறு தொழில்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் தரம் சீனாவைக் காட்டிலும் நன்றாக உள்ளது என தேசிய சிறு தொழில் கழகத்தின் (என்.எஸ்.ஐ.சி.) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எச்.பி.குமார் தெரிவித்துள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மத்திய அரசு மேம்படுத்தி வருவதால் சீன தயாரிப்புகளின் போட்டியை இந்திய நிறுவனங்களால் முறியடிக்க முடிகிறது. தொழில் நுட்பத்தை மேம்படுத்துவது மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் பொருள்களின் விலையை குறைத்து சந்தையில் போட்டியிடும் திறனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என குமார் மேலும் தெரிவித்தார்.

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் என்.எஸ்.ஐ.சி. செயல்பட்டு வருகிறது. சிறிய நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கு பல்வேறு திட்டங்கள் வாயிலாக ஊக்கம் அளித்து வருகிறது. புதிய சந்தைகளுக்கான வாய்ப்பை ஆராய்தல் மற்றும் பெரிய அளவில் ஆர்டர்களை பெறுவது போன்றவற்றை இந்நிறுவனம் மேற்கொள்கிறது. 2011-12-ஆம் நிதி ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 4.48 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 32 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. எகிப்து, ஜிம்ப்பாவே மற்றும் தென்னாப்ரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் பயிற்சி மையங்களை அமைத்து உள்ளது. மெழுகுவர்த்தி மற்றும் சோப்பு போன்ற பொருள்கள் உற்பத்தி செய்வதற்கு தொழில் தொடங்குபவர்களுக்கு இந்த மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply