கண்காட்சி & கருத்தரங்கு

சென்னையில் ஆசிய-பசுபிக் விவசாய ஆலோசனைக் கூட்டம்: ஆக.7-ல் தொடக்கம்

ஆசிய – பசுபிக் மண்டல விவசாய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வரும் வியாழக்கிழமை (ஆக.7) தொடங்குகிறது.

தொடர்ந்து 4 நாள்கள் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தினை எம்.எஸ்.சுவாமிóநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சர்வதேச வேளாண் ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், வேளாண் வல்லுநர்கள், விவசாயிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-

தற்போதைய காலகட்டத்தில் உணவுப் பாதுகாப்பிலிருந்து ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளிலும், வளர்ந்து வரும் நாடுகளிலும் உணவு உற்பத்தியில் குடும்ப வேளாண்மை முறை முக்கிய பங்கு வகிக்கிறது.

அதே போல பொருளாதாரத் தீர்வு, ஊட்டச்சத்து மேம்பாடுக்கும் குடும்ப வேளாண்மை முறை பெரிதும் உதவுகிறது. இந்தியாவில் 60 சதவீத உணவு உற்பத்தி சிறு விவசாயிகள் மூலம் நடைபெறுகிறது.

2025-ஆம் ஆண்டுக்குள் பசியில்லா உலகை உருவாக்குவது அவசியம். அதை கருத்தில் கொண்டு, வேளாண் வல்லுநர்கள், பிரதிநிதிகள், சிறு விவசாயிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து விவசாய கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பூடான், இந்தோனேசியா, மாலத்தீவுகள், நேபாளம், ஆப்கானிஸ்தான், கம்போடியா, ஜப்பான், இலங்கை உள்பட 12 நாடுகளைச் சேர்ந்த வேளாண் வல்லுநர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், சிறு விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் உள்பட அரசு அதிகாரிகளும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

Leave a Reply