சிறுதொழில் வளர்ச்சி உதவிவர்த்தகக் கண்காட்சி & சந்தை

சென்னை வர்த்தக மையத்தில் கண்காட்சி நடத்த மடீட்சியா ஒப்பந்தம்

சென்னை வணிக வளாகத்தில் கண்காட்சி நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தொழில் வர்த்தக மேம்பாட்டு மையத்துடன் மடீட்சியா ஒப்பந்தம் செய்துள்ளது.

மடீட்சியா அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு மைய நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன் மற்றும் மடீட்சியா தலைவர் வி.எஸ்.மணிமாறன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில் விசாகன் பேசுகையில், புது தில்லியில் உள்ள தொழில் வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் (ஐடிபிஓ) மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (டிட்கோ) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக தமிழ்நாடு தொழில் வர்த்தக மேம்பாட்டு மையம் இயங்குகிறது.

இந்த நிறுவனம் சார்பில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப்படும் கண்காட்சிகளுக்கு இந்திய மற்றும் சர்வதேச வர்த்தகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. மடீட்சியாவுடன் ஒப்பந்தம் செய்திருப்பதன் மூலம் தென் மாவட்டங்களில் இயங்கும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். வரும் டிசம்பர் மாதம் வாங்குவோர்-விற்போர் சந்திப்பு மற்றும் “மேட்இன் மதுரை’ கண்காட்சி ஆகியவற்றை சென்னை வர்த்தக மையத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

மடீட்சியா தலைவர் வி.எஸ்.மணிமாறன் கூறியது: விமானங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களுக்குத் தேவையாôன உதிரி பாகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான உற்பத்திப் பொருள்களும் தென் மாவட்ட தொழில் நிறுவனங்களில் தயாராகின்றன. அவற்றை நேரடியாக விற்பனை செய்ய போதிய வாய்ப்பு இல்லாத நிலை இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக மத்திய அரசு நிறுவனங்களையும் பிற நிறுவனங்களையும் நேரடியாக சந்தித்து விற்பனை தொடர்பான புதிய வாய்ப்புகள் தென் மாவட்ட தொழிலகங்களுக்கு கிடைக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் வர்த்தக மேம்பாட்டு நிறுவன மேலாளர் மற்றும் செயலர் குமார், மடீட்சியா துணைத் தலைவர் கே.பி.முருகன், கௌரவ செயலர் கே.எஸ்.சேர்மபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

நன்றி:தினமணி

 

Leave a Reply