தங்கம் & ஆபரணங்கள்

சென்ற நிதி ஆண்டில் 9 சதவீதம் சரிவு நவரத்தினம், ஆபரணங்கள் 3,950 கோடி டாலருக்கு ஏற்றுமதி

2013-14-ஆம் நிதி ஆண்டில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 9 சதவீதம் சரிந்து 3,950 கோடி டாலராக குறைந்துள்ளது என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய 2012-13-ஆம் நிதி ஆண்டில் 4,334 கோடி டாலராக இருந்தது. நம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் இத்துறையின் பங்கு 15 சதவீதமாகும்.

இறக்குமதி கட்டுப்பாடுகள்

பொருளாதார மந்த நிலையால் மேற்கத்திய நாடுகளில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களுக்கான தேவைப்பாடு குறைந்துள்ளது. மேலும் உள்நாட்டில் தங்கம் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இறக்குமதி குறைந்து நகை தொழிலுக்கு தேவையான தங்கம் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டது. இது போன்ற காரணங்களால் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது என இத்துறை நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

ஆபரணங்கள் துறையின் தேவையை ஈடு செய்வதற்காகவே நம் நாடு அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்கிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பிற்கு தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்வதும் ஒரு காரணமாகும். எனவே தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், சென்ற நிதி ஆண்டில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி 40 சதவீதம் சரிந்து 3,346 கோடி டாலராக குறைந்துள்ளது. தங்கம் இறக்குமதி குறைந்ததன் காரணமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை சென்ற நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 3,110 கோடி டாலராக குறைந்தது. முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தில் இது 6,980 கோடி டாலராக இருந்தது.

தங்கம் இறக்குமதி குறைந்ததால் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மார்ச் மாதத்தில் 22 சதவீதம் குறைந்துள்ளது. இது, 2013 அக்டோபர் மாதத்தில் 22 சதவீதம் அதிகரித்திருந்தது. தங்கம் ஏற்றுமதி குறைந்துள்ளது மேலும் இறக்குமதி கட்டுப்பாடுகளால் கடத்தல் அதிகரித்ததால் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

தொழிலாளர்கள்

உள்நாட்டில் தங்கம் பற்றாக்குறையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் சுமார் 15 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். தங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லையென்றால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply