வணிகச் செய்திகள்

செப்டம்பர் மாதத்தில் இதுவரை அன்னிய நிறுவனங்களின் முதலீடு ரூ.20,425 கோடி

அன்னிய நிதி நிறுவனங்கள், செப்டம்பர் மாதத்தில் இதுவரை பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.20,425 கோடியாக உள்ளது.செபி தகவல்செப்டம்பர் 1 முதல் 26-ந் தேதி வரை அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.5,117 கோடிக்கு பங்குகளை வாங்கின. அதே சமயம் ரூ.15,308 கோடிக்கு கடன்பத்திரங்களில் முதலீடு செய்தன. இதனையடுத்து இந்நிறுவனங்கள் பங்கு மற்றும் கடன்பத்திரங்களில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.20,425 கோடியாக உள்ளது. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யின் புள்ளிவிவரம் ஒன்றின் மூலம் இது தெரியவந்துள்ளது.மத்திய அரசு பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையால் இந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீட்டை அதிகரித்து வருகின்றன.இந்திய பங்குச்சந்தைகளின் வளர்ச்சியில் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை இந்நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.2.03 லட்சம் கோடியாகும். இதில், பங்குகளில் மேற்கொண்ட ரூ.83 ஆயிரம் கோடி மற்றும் கடன்பத்திரங்களில் மேற்கொண்ட ரூ.1.20 லட்சம் கோடி முதலீடு அடங்கும். அன்னிய நிதி நிறுவனங்களுக்கு கடந்த 1992 நவம்பர் மாதத்தில் இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஏறத்தாழ 22 வருடங்களாக அந்த நிறுவனங்கள் கடன்பத்திரம் மற்றும் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றன. இதுவரை அவை மேற்கொண்ட ஒட்டு மொத்த முதலீடு ரூ.9.92 லட்சம் கோடியை (20,400 கோடி டாலர்) தாண்டியுள்ளது. இதில் பங்குகளில் 16,000 கோடி டாலரும், கடன்பத்திரங்களில் 4,400 கோடி டாலரும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.சில்லறை வர்த்தகம்சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தல், எரிவாயு விலை உயர்வை அமல்படுத்துதல் மற்றும் நிலக்கரி சுரங்க ஏலத்தை விரைவில் நடத்துதல் போன்றவற்றில் மத்திய அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இனி வரும் வாரங்களில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு இருக்கும்.

Leave a Reply