பொருள் வணிகம்

சேலம் வெள்ளிக்கொலுசுக்கு ஆன்லைன் வர்த்தகத்தால் பாதிப்பு

சேலத்தில்  நூற்றுக்கணக்கான வெள்ளிப்பட்டறைகள் உள்ளன. இங்கு வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞாண் கொடி, வெள்ளிதட்டு, தண்டை, சந்தனக்கிண்ணம், குங்குமசிமிழ், வெள்ளிவிளக்கு, சுவாமி சிலைகள் என தினமும் ஒரு டன் அளவுக்கு வெள்ளிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றை மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட அனைத்து மாநில வியாபாரிகளும் வந்து வாங்கிச் செல்கின்றனர்.இதுகுறித்து, சேலம் வெள்ளிப் பொருள் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘ஒவ்வொரு மாநில மக்களும் எந்த வண்ணங்களை விரும்புகின்றனர் என்பதை அறிந்து அவர்களின் ரசனைக்கேற்ப பொருட்களை தயாரித்து வழங்குகிறோம். இந்த தொழிலில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் வெள்ளி கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பு ஒரு கிலோ வெள்ளி ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை மட்டுமே விற்றது. ஆன்லைன் வர்த்தகத்திற்கு பிறகு வெள்ளி விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தற்போது பார் வெள்ளி கிலோ ரூ.39,500க்கும், ஆபரண வெள்ளி கிலோ ரூ.40,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மொத்தமாக வெள்ளிக்கட்டியை வாங்கி தொழில் செய்பவர்களுக்கு,  விலை குறையும் போது நஷ்டம் ஏற்படுகிறது. வெள்ளி விலை சீராக இருக்க வேண்டும் என்றால் வெள்ளியை ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நீக்க வேண்டும்,’ என்றனர்.

Leave a Reply