கலை & கைவினைப் பொருட்கள்

ஜனவரி மாதத்தில் கைவினை பொருள்கள் ஏற்றுமதி 40% வளர்ச்சி

கைவினை பொருள்கள் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 40 சதவீதம் வளர்ச்சி கண்டு 35 கோடி டாலராக உயர்ந்துள்ளது.லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட புதிய சந்தைகளில் இந்திய கைவினை பொருள்களுக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளதால் ஜனவரி மாதத்தில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் நடப்பு நிதி ஆண்டிற்கான ஏற்றுமதி இலக்கை எட்ட முடியும் என கைவினை பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் செயல் இயக்குனர் ராகேஷ்குமார் தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டில் 410 கோடி டாலருக்கு கைவினை பொருள்கள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் பத்து மாதங்களில் கைவினை பொருள்கள் 278 கோடி டாலருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும்.

2012–13–ஆம் நிதி ஆண்டில் மொத்த கைவினை பொருள்கள் ஏற்றுமதி 330 கோடி டாலராக இருந்தது. பாரம்பரிய சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது. எனவே, இனிவரும் மாதங்களிலும் கைவினை பொருள்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply