இறக்குமதி செய்திகள்

ஜனவரி மாதத்தில், தங்கம் இறக்குமதி 38 டன்னாக உயர்வு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடரும்

கடந்த 2013–ஆம் ஆகஸ்டு மாதத்தில் 3 டன்னாக இருந்த தங்கம் இறக்குமதி, ஜனவரியில் பன்மடங்கு அதிகரித்து 38 டன்னாக உயர்ந்துள்ளது. எனவே, மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தொடரும் என நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

300 டன்னை தாண்டியது

தங்கம் இறக்குமதி 2013 நவம்பர் மாதத்தில் 19 டன்னாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் 25 டன்னாக உயர்ந்தது. 2013 ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களில் இறக்குமதி 300 டன்னை தாண்டியது. இதனையடுத்து கடந்த 2012–13–ஆம் நிதி ஆண்டில் அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு 8,820 கோடி டாலராக உயர்ந்தது.

எனவே, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதமாக உயர்த்தியது. இது 2012 ஜனவரியில் 2 சதவீதமாக இருந்தது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தை 20 சதவீதத்தை ஆபரணமாக மாற்றி மறு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை பாரத ரிசர்வ் வங்கி விதித்தது. இதன் காரணமாக ஆகஸ்டு மாதத்தில் தங்கம் இறக்குமதி 3.38 டன்னாக குறைந்தது. இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மதிப்பின் அடிப்படையில் 77 சதவீதம் குறைந்து 749 கோடி டாலரிலிருந்து 172 கோடி டாலராக குறைந்துள்ளது. அம்மாதத்தில் சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையில் உள்ள வித்தியாசமான வர்த்தக பற்றாக்குறை 992 கோடி டாலராக குறைந்தது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

நடப்பு நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4,500 கோடி டாலராக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, சென்ற நிதி ஆண்டைக் காட்டிலும் 4 சதவீதம் குறைவாகும். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அளவின் அடிப்படையில் தங்கம் இறக்குமதி உயர்ந்துள்ளது.

Leave a Reply