இறக்குமதி செய்திகள்

ஜனவரி வரையிலான 10 மாதங்களில் 67.90 லட்சம் டன் யூரியா இறக்குமதி

ஜனவரி வரையிலான 10 மாதங்களில் 67.90 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 192 கோடி டாலராகும். கடந்த முழு நிதி ஆண்டில் (2012–13) 80.40 லட்சம் டன் யூரியா இறக்குமதியாகியுள்ளது. இதில் 18.30 லட்சம் டன் ஓமன் இந்தியா பெர்டிலைசர் கம்பெனி வாயிலாகவும், 62.10 லட்சம் டன் பொதுத் துறை நிறுவனங்கள் வாயிலாகவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஓமன் இந்தியா பெர்டிலைசர்

நடப்பு நிதி ஆண்டின் முதல் பத்து மாதங்களில் ஓமன் இந்தியா பெர்டிலைசர் நிறுவனத்தின் மூலம் 18.30 லட்சம் டன்னும், இந்தியன் பொட்டாஷ், எம்.எம்.டி.சி. மற்றும் எஸ்.டி.சி. ஆகிய நிறுவனங்கள் வாயிலாக 49.60 லட்சம் டன்னும் யூரியா இறக்குமதியாகியுள்ளது.

நம் நாட்டில் ஆண்டுக்கு 2.20 கோடி டன் யூரியா உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும் 3 கோடி டன் தேவைப்படுவதால் மீதமுள்ள அளவு இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. பருவமழை சிறப்பாக இருந்ததால் நடப்பு நிதி ஆண்டில் யூரியா பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே இறக்குமதியும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2012–ஆம் ஆண்டில் யூரியா இறக்குமதி குறைவாக இருந்தது. கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வறட்சி காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதே இதற்கு காரணம்.

ஏப்ரல்–ஜனவரி மாத காலத்தில் யூரியா அல்லாத உரங்களான எம்.ஓ.பி., டீ.ஏ.பி. ஆகிய உரங்களின் இறக்குமதி 55.60 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இந்த உரங்களைப் பொறுத்தவரை சத்து சார்ந்த மானியக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. பயன்பாடு அதிகமாக உள்ளதால் யூரியா விலையை மட்டும் மத்திய அரசு நிர்ணயிக்கிறது. இதனால் உர நிறுவனங்கள் அடக்க விலைக்கும் குறைவாக யூரியா உரத்தை விவசாயிகளுக்கு விற்பனை செய்கின்றனன. இதனால் நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு மானியம் வழங்கி ஈடு செய்கிறது. தற்போது சில்லறை விற்பனையில் ஒரு டன் யூரியா விலை ரூ5,360–ஆக உள்ளது.

கோரிக்கை

உர  மானியத்தால்  மத்திய  அரசுக்கு பெரும் சுமை ஏற்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் யூரியா விலையில் அதிக மாற்றம் செய்யப்படவில்லை. அதே சமயம் மானியத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. இதனால் நீண்ட காலமாக யூரியா சில்லறை விற்பனை விலையை உயர்த்த வேண்டும் என மத்திய உர அமைச்சகம் கோரிக்கை விடுத்து வருகிறது.

 

Leave a Reply