பொறியியல் & மின்னணு சாதனங்கள்

ஜெனரல் மோட்டார்ஸ் கார்கள் ஏற்றுமதி தொடக்கம்

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் கார்களை முதல் முறையாக ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸின் இந்தியப் பிரிவு, தனது சிறு ரக மாடலான “செவர்லே பீட்’ காரை தென் அமெரிக்க நாடான சிலிக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அரவிந்த் சக்úஸனா வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள விவரம்:

மும்பை துறைமுகத்திலிருந்து 140 “செவர்லே பீட்’ கார்கள் சிலி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்நாட்டு போக்குவரத்து விதிகளுக்கு ஏற்றாற்போல இவை இடது பக்க ஓட்டுநர் வசதி கொண்ட வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கார்கள் கடந்த வியாழக்கிழமை (செப்.25) மும்பை துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் உலகின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்ய உகந்தவை என்கிற எங்களின் உறுதியான நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தும் விதத்தில் இந்த ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவின் பிற மாடல் கார்களை வேறு பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் தொடங்குவோம். இந்தியாவில் அமைத்துள்ள எங்கள் ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்யவும் இந்த ஏற்றுமதி நடவடிக்கைகள் உதவும் என்று அவர் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் தாலேகானில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் ஆலையின் வருடாந்தர உற்பத்தி திறன் 1,70,000 வாகனங்களாகும். இந்த ஆலையில் 1,60,000 என்ஜின்களையும் உற்பத்தி செய்ய இயலும். “செவர்லே பீட்’ மாடல் கார் இந்தியாவில் 2010-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிக அளவில் விற்பனையாகும் மாடல் “பீட்’ என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மாடலைத் தவிர, ஸ்பார்க், செவர்லே செயில், க்ரூஸ், டாவெரா, என்ஜாய், கேப்டிவா ஆகிய மாடல்களையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

Leave a Reply