இறக்குமதி செய்திகள்

தங்கம் இறக்குமதி கட்டுப்பாடு: மார்ச்சில் மறு ஆய்வு

தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து மார்ச் மாத இறுதிக்குள் மறு ஆய்வு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புது தில்லியில் தேசிய சுங்க தினம் தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியது: கடந்த 2012-2013 நிதி ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 88.2 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது (சுமார் ரூ. 5.38 லட்சம் கோடி). இதையடுத்து, பல்வேறு இறக்குமதி கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நடப்பு நிதி ஆண்டில் இது 50 பில்லியன் டாலருக்கும் குறைவாக (சுமார் ரூ. 3 லட்சம் கோடி) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் தங்கம் இறக்குமதி குறித்த விதிமுறைகளை மத்திய அரசு மறு ஆய்வு செய்யும். ஆனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வந்தால் மட்டுமே இறக்குமதி விதிமுறைகள் தளர்த்தப்படும்.

இந்தக் கட்டுப்பாடுகளால், தங்கம் கடத்தல் அதிகரித்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஒன்று முதல் மூன்று டன் தங்கம் இந்தியாவுக்குள் கடத்தப்படுகிறது என்று தெரிகிறது. கடத்தல் மூலம் நாம் சில இழப்புகளை நேரிட்டாலும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் வர்த்தக பற்றாக்குறை, கரன்சி மதிப்பு போன்றவற்றில் நமக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.

நீண்ட கால அளவில் நோக்கும்போது, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்துவது போன்ற அடக்குமுறைக் கொள்கை மூலமாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைய வைப்பது சரியான வழிமுறையாக இருக்காது. நீண்ட கால அளவில், நமது ஏற்றுமதிகளை அதிகரிக்கச் செய்வதே நமது இலக்காக இருக்க வேண்டும். இறக்குமதிகளுக்கு அளிக்க வேண்டிய டாலர்களை ஏற்றுமதி மூலம் நாம் ஈட்ட வேண்டும். ஏற்றுமதிகளை அதிகரிக்கச் செய்யும் வழிகளை நாம் காண வேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 300 டன் இறக்குமதி செய்யப்பட்டது. மே மாதம் மட்டுமே 162 டன் தங்கம் இறக்குமதியானது. இந்நிலையில், தங்கம் இறக்குமதிக்கான வரியை சென்ற ஆண்டு மும்முறை உயர்த்தி, இப்போது 10 சதவீதமாக உள்ளது. மேலும் இறக்குமதி அளவில் 20 சதவீதத்தை ஆபரணம் போன்ற மதிப்புக் கூட்டலுக்குப் பிறகு, ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. இதையடுத்து, நவம்பரில் 19.3 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.

Leave a Reply