இறக்குமதி செய்திகள்

தங்கம் இறக்குமதி செய்ய 5 தனியார் வங்கிகளுக்கு அனுமதி விலை குறையுமா?

ஐந்து தனியார் வங்கிகளுக்கு 80:20 திட்டத்தின் கீழ் தங்கம் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, தங்க ஆபரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு போதுமான அளவிற்கு தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது என ரிசர்வ் வங்கி துணை கவர்னர் கே.சி.சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.

தொழில்துறை அதிகாரிகள்

எச்.டீ.எஃப்.சி. பேங்க், ஆக்சிஸ் பேங்க், கோட்டக் மகிந்திரா வங்கி, இண்டஸ்இந்த் பேங்க் மற்றும் யெஸ் பேங்க் ஆகிய ஐந்து தனியார் வங்கிகளுக்கு தங்கம் இறக்குமதி செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இரண்டு தொழில்துறை அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்தனர். ஆனால், அவர்கள் தங்களது பெயரை தெரிவிக்க விரும்பவில்லை.

சென்ற 2012-13-ஆம் நிதி ஆண்டில் அன்னிய செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை 8,820 கோடி டாலராக வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து இருந்தது. அப்போது தங்கம் பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருந்தது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்ததற்கு கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டதே முக்கிய காரணமாகும். எனவே, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் அதன் மீதான இறக்குமதி வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது, 2012 ஜனவரியில் 2 சதவீதமாக மட்டுமே இருந்தது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை ஆபரணங்களாக மாற்றி மறு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் ரிசர்வ் வங்கி விதித்தது. இந்த நிபந்தனையின்படி மூன்று ஆண்டுகளாக தங்கம் அல்லது ஆபரணங்கள் ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்து வந்த ஆறு வங்கிகள் மற்றும் மூன்று பொதுத்துறை வர்த்தக ஏஜன்சிகளுக்கு மட்டுமே தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ஆறு வங்கிகளில் பெரும்பாலானவை பொதுத்துறை வங்கிகளாகும்.

வரம்பு

கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கம் அல்லது ஆபரணங்கள் ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்யாத தனியார் வங்கிகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் தங்கம் இறக்குமதி செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாதம் ஒன்றிற்கான தங்கம் இறக்குமதி 40 டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, பிப்ரவரி மாதத்தில் 20 டன்னாக இருந்தது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முன்பு மாதம் ஒன்றிற்கு 70 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.

அளிப்பு

தனியார் வங்கிகளுக்கு தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டில் தங்கம் அளிப்பு அதிகரிக்கும் என்றும், தங்கம் வாங்குவதற்கு கொடுத்து வந்த கூடுதல் கட்டணமும் குறையும் என்றும் அனைத்திந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரண வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ஹரேஷ் சோனி தெரிவித்துள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகளால் தங்கம் பயன்பாட்டில் இந்தியா தற்போது இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.

பிப்ரவரியில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 1 சதவீதம் உயர்வு

பிப்ரவரி மாதத்தில் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 1 சதவீதம் உயர்ந்து 71.84 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் தங்கம் இறக்குமதி குறைந்ததால், இந்த நிதி ஆண்டின் தொடக்கத்திலிருந்து தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி சரிவடைந்து வந்துள்ளது. இதனை உறுதிபடுத்துகின்ற வகையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் தங்க நகைகள் ஏற்றுமதி 46 சதவீதம் சரிவடைந்து 1,167 கோடி டாலரிலிருந்து 635 கோடி டாலராக குறைந்துள்ளது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply