இறக்குமதி செய்திகள்

தங்கம் இறக்குமதி மீதான அடிப்படை விலை 2.4 சதவீதம் உயர்த்தப்பட்டது

சர்வதேச சந்தைகளில் விலை உயர்ந்துள்ளதால் தங்கம் இறக்குமதி மீதான அடிப்படை விலையை மத்திய அரசு 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

வரி ஏய்ப்பு

சில நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் சரக்குகளின் விலையை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்கின்றன. இதனை தடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட முக்கிய பொருள்களின் இறக்குமதிக்கான அடிப்படை விலையை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது.

உக்ரைன் போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சிங்கப்பூரில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,300 டாலராகவும், ஒரு அவுன்ஸ் வெள்ளி 19.52 டாலராகவும் அதிகரித்துள்ளது. புதுடெல்லியில் 10 கிராம் தங்கம் விலை ரூ.130 உயர்ந்து ரூ.30,130-ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, தங்கம் இறக்குமதி மீதான அடிப்படை விலை இப்போது 421 டாலரிலிருந்து (10 கிராம்) 431 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. வெள்ளி இறக்குமதி மீதான அடிப்படை விலை 644 டாலரிலிருந்து (ஒரு கிலோ) 646 டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய கலால் மற்றும் சுங்க வரிகள் வாரியம் இது தொடர்பான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2012-13-ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை மிகவும் உயர்ந்து இருந்தது. சரக்குகள் இறக்குமதி அதிகமாக இருந்ததே இதற்கு காரணம். கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம்தான் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அந்த நிதி ஆண்டில் 845 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் சென்ற 2013-14-ஆம் நிதி ஆண்டில் தங்கம் இறக்குமதி 550 டன்னாக குறைந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இறக்குமதி வரி

தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் அதன் மீதான இறக்குமதி வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது, 2012 ஜனவரியில் 2 சதவீதமாக மட்டுமே இருந்தது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை ஆபரணங்களாக மாற்றி மறு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் ரிசர்வ் வங்கி விதித்தது.

இதனையடுத்து கடந்த 2013-14-ஆம் நிதி ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி அதற்கு முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 40 சதவீதம் சரிவடைந்து 5,579 கோடி டாலரிலிருந்து 3,346 கோடி டாலராக குறைந்துள்ளது.

தளர்த்த விருப்பம்

இறக்குமதி கடும் கட்டுப்பாடுகளால் ஆபரண தயாரிப்பு நிறுவனங்களுக்கு போதுமான அளவில் தங்கம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக 2013-14-ஆம் நிதி ஆண்டில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 8.82 சதவீதம் சரிவடைந்து 3,952 கோடி டாலராக குறைந்துள்ளது. எனவே, தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய வர்த்தக அமைச்சகம் விரும்புகிறது.

Leave a Reply