இறக்குமதி செய்திகள்

தங்கம் இறக்குமதி மீதான அடிப்படை விலை 2.7 சதவீதம் உயர்த்தப்பட்டது

சர்வதேச சந்தை விலையில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதால் தங்கம் இறக்குமதி மீதான அடிப்படை விலையை மத்திய அரசு 2.77 சதவீதம் உயர்த்தியுள்ளது.

445 டாலராக உயர்வு

சில நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் சரக்குகளின் விலையை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்கின்றன. இதனை தடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட முக்கிய பொருள்களின் இறக்குமதிக்கான அடிப்படை விலையை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. தங்கம் இறக்குமதி மீதான அடிப்படை விலை இப்போது 433 டாலரிலிருந்து (10 கிராம்) 445 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், வெள்ளி இறக்குமதி மீதான அடிப்படை விலை 699 டாலரிலிருந்து (ஒரு கிலோ) 694 டாலராக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய கலால் மற்றும் சுங்க வரிகள் வாரியம் இது தொடர்பான அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அன்னிய செலாவணி செலவிற்கும், வரவிற்கும் இடையிலான வித்தியாசம் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எனப்படுகிறது. சென்ற 2012-13-ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை மிகவும் உயர்ந்து இருந்தது. சரக்குகள் இறக்குமதி அதிகமாக இருந்ததே இதற்கு காரணம். கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம்தான் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. சென்ற நிதி ஆண்டில் 845 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் நடப்பு நிதி ஆண்டில் தங்கம் இறக்குமதி 550 டன்னுக்கும் குறைவாகவே இருக்கும் என நவரத்தினங்கள் மற்றும் ஆபரண கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வர்த்தக பற்றாக்குறை

பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 3.67 சதவீதம் குறைந்து 2,568 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. அதேசமயம், இறக்குமதி 17 சதவீதம் குறைந்து 3,381 கோடி டாலராக குறைந்துள்ளது. இதனையடுத்து அம்மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 813 கோடி டாலராக கணிசமாக குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி இறக்குமதி 71 சதவீதம் குறைந்து 163 கோடி டாலராக குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும். இந்த நிதி ஆண்டில் (2013-14) நடப்பு கணக்குப் பற்றாக்குறை 4,500 கோடி டாலராக குறையும் என நிதி அமைச்சகம் அண்மையில் தெரிவித்துள்ளது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply