இறக்குமதி செய்திகள்

தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு நடவடிக்கை

தங்க நகை தயாரிப்பாளர்களுக்கு போதுமான தங்கம் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். மத்திய அரசு, ‘நடப்பு கணக்கு பற்றாக்குறையை’ (சிஏடி) குறைப்பதற்காக, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான சுங்க வரியை 2 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக கடந்த ஆண்டு உயர்த்தியது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை ஆபரண தங்கமாக ஏற்றுமதி செய்ய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ரிசர்வ் வங்கியும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், ‘தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.

எனவே, சுங்க வரியை 2 சதவீதமாக குறைக்க வேண்டும்’ என்று தங்க நகை வியாபாரிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ‘தங்கத்தின் மீதான கட்டுபாடுகளை தளர்த்துவது குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டதாக’ மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘இது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் போது தங்கம் கடத்தல் போன்ற வேறு பிரச்னைகளும் உருவாகிறது. நமது நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தங்க ஆபரண தொழில் மிக முக்கியமான பிரிவாக இருக்கிறது’ என்றார். நடப்பு நிதியாண்டில் 300 சதவீதம் அளவிற்கு தங்க கடத்தல் நடந்துள்ளது. இது தொடரும் நிலையில் தான் இருக்கிறது என்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி தினகரன்

 

Leave a Reply