தங்கம் & ஆபரணங்கள்

தங்கம் இறக்குமதி வரியை 2 சதவீதமாக்க வேண்டும்

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை, தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து, 2 சதவீதமாக குறைக்க வேண்டும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு (ஜி.ஜே.இ.பி.சி.,), வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக, இக்குழு, மத்திய நிதியமைச்சகத்திடம் அளித்துள்ள அறிக்கை விவரம்:

இறக்குமதி வரி உயர்வால், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டும், நகை வர்த்தகர்களின் நலன் கருதியும், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை, 2 சதவீதமாக குறைக்க வேண்டும்.

நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கணிசமாக குறைந்துள்ளதால், இறக்குமதியாகும் தங்கத்தில், 20 சதவீதம் மதிப்பு கூட்டப்பட்ட ஆபரணங்களாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப் பாட்டையும் நீக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்த நடவடிக்கைகளால், தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. அதே சமயம், உள்நாட்டில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், சென்ற நிதியாண்டில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 9 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 3,950 கோடி டாலராக சரிவடைந்தது.இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 4,334 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது.

Leave a Reply