இறக்குமதி செய்திகள்

தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்: நவரத்தின மற்றும் ஆபரண தங்கம் வர்த்தக கூட்டமைப்பு

நலிவடைந்து வரும் ஆபரணங்கள் மற்றும் நகைகள் தயாரிப்பு தொழிலை ஊக்குவிக்கும் விதமாக தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று அனைத்து இந்திய நவரத்தின மற்றும் ஆபரண தங்கம் வர்த்தக கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அனைத்து இந்திய நவரத்தின மற்றும் ஆபரணங்கள் வர்த்தக கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் தங்கம் மீதான இறக்குமதி வரியை 10%ல் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் இடைகால பட்ஜெட் அறிவிப்பில் தங்க ஆபரணங்கள் மற்றும் நகைகள் தயாரிப்பு தொழிலை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகள் ஏதும் இடம்பெறவில்லை என்றும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு தங்கத்திற்கான சேவை வரியை 10% அதிகரித்தது. அத்துடன் மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு வரிகள் காரணமாகவும், தங்கத்தின் விலை உயர்வுடன் காணப்படுவதோடு அதன் இறக்குமதியும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
நடப்பு கணக்கு பற்றாக்குறையை சீர் செய்ய தங்கம் மீது இறக்குமதி வரி விதிப்பது மட்டும் பயன் அளிக்காது என்றும், அனைத்துத் துறைகளிலும் ஒருமித்த வளர்ச்சியை ஏற்படுத்துவதால் மட்டுமே சாத்தியப்படும் நவரத்தின மற்றும் ஆபரண கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2013 டிசம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில் 2014 ஜனவரி மாதத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதி 40 டன்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறக்குமதி வரியை குறைக்காமல் காலதாமதம் செய்வது வெந்தபுண்ணில் வேலைபாய்ச்சும் செயல் என்றும் இந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இறக்குமதி வரி காரணமாக 2013ம் ஆண்டில் நாட்டின் தங்கம் இறக்குமதி 650 முதல் 700 டன்களாகக் குறைந்திருந்தது என்றும் 2014ம் ஆண்டில் ஏறக்குறைய 30% சரிவுடன் 500 டன்களாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களும் தற்போது வெள்ளியை பயன்படுத்துவதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் நகைகள் தயாரிப்பு பாதாளத்திற்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், கடத்தல் நடவடிக்கை மூலமாகவும் தங்கம் கொண்டு வரப்படுவது அதிகரித்து வருகிறது.
இத்தகைய சூழலில் தங்கம் மீதான சேவை வரி குறைக்கப்படுவதால் மட்டுமே அது சார்ந்த தயாரிப்பு துறைகளை காப்பாற்ற ஒரே வாய்ப்பு என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய நிலையில் இறக்குமதி வரி உயர்வு காரணமாக முறைப்படி தங்கத்தை இறக்குமதி செய்யப்படுவதைவிட அதனை கடத்தல் வழியாக கொண்டு வருவதும் அதிகரித்துள்ளது. 2013 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 200 டன் தங்கம் கடத்தல் வழியாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த இறக்குமதியில் 4ல் 1 பங்கு என்று சர்வதேச தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டில் இருந்ததைவிட 2014ம் ஆண்டில் நாட்டின் தங்கம் தேவை 1000 டன்னாக உயர வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில் இறக்குமதி வரியை குறைக்காவிட்டால் தங்கம் கடத்தப்படுவதை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகும். இதை கருத்தில் கொண்டு இறக்குமதி வரியை அரசு குறைப்பது அவசியம் என்றும் சர்வதேச தங்க கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தங்கம் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வந்துள்ளது என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இனி அதிகரிக்கும் என்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இதே கருத்தை பொருளாதார வள்ளுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். சர்வதேச காரணங்களால் 2014ல் இது வரையிலான காலத்தில் தங்கத்தின் மதிப்பு 12% அதிகரித்துள்ளது.

Leave a Reply