இறக்குமதி செய்திகள்

தங்கம், வெள்ளி இறக்குமதி அடிப்படை விலை குறைப்பு

சர்வதேச சந்தை விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம், வெள்ளி இறக்குமதி மீதான அடிப்படை விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. விலை நிர்ணயம்சில நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் பொருள்களின் விலையை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்கின்றன.

இதனை தடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட முக்கிய பொருள்களின் இறக்குமதிக்கான அடிப்படை விலையை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. தங்கம் மீதான அடிப்படை விலையை மத்திய அரசு இப்போது 401 டாலரிலிருந்து (10 கிராம்) 391 டாலராக குறைத்துள்ளது. வெள்ளி மீதான அடிப்படை விலை 575 டாலரிலிருந்து (ஒரு கிலோ) 551 டாலராக குறைக்கப்பட்டுள்ளது.நம் நாட்டில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இப்போது தங்கம் இறக்குமதி மீது 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பாரத ரிசர்வ் வங்கி, இறக்குமதியாகும் தங்கத்தில் 20 சதவீதத்தை மதிப்புக்கூட்டி கண்டிப்பாக மறுஏற்றுமதி செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.

இதன்படி 80 சதவீத தங்கத்தை மட்டுமே உள்நாட்டில் பயன்படுத்த முடியும். இது 80:20 விதிமுறை என்றழைக்கப்படுகிறது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் கடந்த நிதி ஆண்டில் (2013-14) தங்கம், வெள்ளி இறக்குமதி 40 சதவீதம் குறைந்து 3,346 கோடி டாலராக குறைந்தது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் இறக்குமதி 5,579 கோடி டாலராக இருந்தது. தங்கம் இறக்குமதி இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதத்தில் தங்கம் இறக்குமதி 203 கோடி டாலராக உயர்ந்தது. இது 2013 ஆகஸ்டில் 74 கோடி டாலராக இருந்தது. பண்டிகை காலம் நெருங்கியதையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் 95 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. நடப்பு 2014-ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 850 டன்னாக குறையும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டில் 975 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.

Leave a Reply