இறக்குமதி செய்திகள்தங்கம் & ஆபரணங்கள்

தங்கம், வெள்ளி இறக்குமதி மீதான வரி குறைப்பு

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சுங்கம் மற்றும் ஆயத்தீர்வை ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இறக்குமதி மீதான வரி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளினால், கடந்த நிதியாண்டில் 845 டன்னாக இருந்த தங்க இறக்குமதி, இந்த நிதியாண்டில் 500 டன்னாக குறைந்து விடக்கூடும் என்றுத் தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக கடந்த 26ஆம் தேதியன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நகைத் தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான வரியை மத்திய அரசு திங்கள்கிழமை குறைத்துள்ளது.

இதுவரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 10 கிராம் தங்கத்துக்கு 407 டாலரும் (ரூ.25,461), ஒரு கிலோ வெள்ளிக்கு 663 டாலருமாக (ரூ. 41,477) வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனை 10 கிராம் தங்கத்துக்கு 404 டாலராகவும் (ரூ. 25,274) 1 கிலோ வெள்ளிக்கு 635 டாலராகவும் ( 39,725) மத்திய அரசு குறைத்துள்ளது.

மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அடுத்தடுத்து சலுகைத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது.

மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் வேண்டுகோளை ஏற்று 12 ஆக மத்திய அரசு அண்மையில் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply