தங்கம் & ஆபரணங்கள்

தங்க ஆபரணம், நாணயங்கள் ஏற்றுமதி 22 சதவீதம் உயர்ந்தது

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல்-செப்டம்பர்) தங்க ஆபரணங்கள், நாணயங்கள் மற்றும் பதக்கங்கள் ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்து ரூ.33,594 கோடியாக உயர்ந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் 80:20 என்ற விதிமுறையே ஏற்றுமதி அதிகரித்ததற்கு முக்கிய காரணம் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

நடப்பு கணக்கு

கடந்த 2012-13-ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம் அதிகம் இறக்குமதி செய்யப்பட்டதே இதற்கு காரணமாகும். எனவே, மத்திய அரசு தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாரத ரிசர்வ் வங்கியும் தங்கம் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதில் 80:20 சதவீத விதியும் ஒன்றாகும். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை மதிப்புக்கூட்டி கண்டிப்பாக மறுஏற்றுமதி செய்ய வேண்டும்.

இதனால் மதிப்புக் கூட்டிய தங்கம் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் சில குறிப்பிட்ட முகமைகள் தங்கம் இறக்குமதி செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. ஏப்ரல்-செப்டம்பர் மாத காலத்தில் ரூ.27,530 கோடிக்கு தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நாணயங்கள் மற்றும் பதக்கங்கள் ரூ.6,064 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளன. சென்ற ஆண்டின் இதே காலத்தில் மொத்தம் ரூ.27,551 கோடிக்கு தங்க ஆபரணங்கள், பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.

முதல் 6 மாதங்களில் மதிப்புக்கூட்டிய தங்கம் ஏற்றுமதியில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் ஏற்றுமதி பகிர்வு மண்டலங்களின் பங்கு சரிவடைந்துள்ளது. இந்த மண்டலங்களிலிருந்து ரூ.11,300 கோடிக்கு தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.14,579 கோடியாக இருந்தது.

தங்கம் பயன்பாடு

2013-14-ஆம் நிதி ஆண்டில் ரூ.70,000 கோடிக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதனால் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதியை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. நம் நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

 

Leave a Reply