வணிகச் செய்திகள்

துபாய் நாட்டுடன் வர்த்தகம் மேற்கொண்டதில் இந்தியா முதலிடம்

2013-ஆம் ஆண்டில் துபாய் நாட்டுடன் வர்த்தகம் மேற்கொண்டதில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. அவ்வாண்டில் 3,700 கோடி டாலர் அளவிற்கு அந்நாட்டுடன் இந்தியா வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. இது துபாயின் மொத்த வெளிநாட்டு வர்த்தகத்தில் 10 சதவீதமாகும்.

சீனா சுமார் 9.8 சதவீத பங்களிப்புடன் (3,670 கோடி டாலர்) இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா (2,340 கோடி டாலர்), சவுதி அரேபியா (2,300 கோடி டாலர்) மற்றும் இங்கிலாந்து (1,520 கோடி டாலர்) ஆகிய நாடுகளும் அதிக அளவில் வர்த்தகம் மேற்கொண்டுள்ளன.

இந்தியா, துருக்கி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் உள்ளன. மறுஏற்றுமதியில் சவுதி அரேபியா முன்னணியில் உள்ளது. இந்தியா மற்றும் ஈராக் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. துபாயில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்ததில் சீனா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா அடுத்த இடங்களில் உள்ளன.

துபாய் நாட்டின் மொத்த வெளிநாட்டு வர்த்தகம் 2013-ஆம் ஆண்டில் 36,200 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை (2012) காட்டிலும் 2,600 கோடி டாலர் அதிகமாகும். இறக்குமதி 2,000 கோடி டாலர் அதிகரித்து 22,000 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அனைத்து மட்டத்திலும் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்ததால் சென்ற ஆண்டில் வெளிநாட்டு வர்த்தகம் எட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply