சிறுதொழில் வளர்ச்சி உதவிவங்கிக் கடன் & மான்யம்

தேசிய சிறுதொழில் நிறுவனத்துடன் ஐசிஐசிஐ வங்கி ஒப்பந்தம்

சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான கடனளிப்பு தொடர்பாக தேசிய சிறுதொழில் நிறுவனத்துடன் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வங்கி இது குறித்து திங்கள்கிழமை (ஜன. 20) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கும் விவரம்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் நீடித்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக அவற்றுக்கான கடனளிப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் தேசிய சிறுதொழில் நிறுவனம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் கீழ், தேசிய சிறுதொழில் நிறுவனத்தின் கீழ் வரக் கூடிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் குறித்த விவரங்கள், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் பகிர்ந்துகொள்ளப்படும். அந்நிறுவனங்களின் தேவைக்குத் தக்கவாறு வங்கியானது கடன் திட்டங்களை அளிக்கும்.

தேசிய சிறு தொழில் நிறுவனத்தின் நிதிப் பிரிவு இயக்குநர் ரவீந்திரநாத், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் சுயதொழில் பிரிவுத் தலைவர் பவேஷ் குப்தா ஆகியோர் இது தொடர்பான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் சர்வதேச அளவிலான வர்த்தகப் போட்டிகளை சந்திக்கும் விதமாக தங்களைத் தயார்படுத்திக் கொள்ள தேவையான வங்கி வசதிகளை இந்த உடன்படிக்கை மூலம் அளிக்க முடியும் என்று இரு நிறுவனங்களும் நம்பிக்கை தெரிவித்தன.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியானது தனியார் துறை வங்கிகளிலேயே மிகப் பெரியதும் இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியுமாகும். கடந்த நிதி ஆண்டில், இவ்வங்கி மற்றும் இதன் துணை நிதி நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்றுமுதல் மதிப்பு சுமார் ரூ. 7.68 லட்சம் கோடியாகும். இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளில் இவ்வங்கி செயல்படுகிறது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply