காபி & தேயிலை

தேயிலை ஏற்றுமதி 20 சதவீதம் சரிவடையும்

நடப்பு, 2013-14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி, கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தை விட, 15-20 சதவீதம் சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில், கென்யாவில் தேயிலை உற்பத்தி மிகவும் அதிகரித்துள்ளது. சர்வதேசந்தையில், நம்நாட்டிற்கு கடும் போட்டியாக கென்யா உருவெடுத்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின், ஏற்றுமதிக்கான தர கட்டுப்பாடுகளாலும், தேயிலை ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகும் என, இந்திய தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலர் சேத்தன் பட்டேல் தெரிவித்தார்.கென்யா, சர்வதேசசந்தைக்கு குறைந்த விலையில் தேயிலை ஏற்றுமதி செய்து, நம் வாடிக்கை நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது. கென்யாவின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்றுமதிக்கான தேயிலைக்கு, மத்திய அரசு, 20 வகையான தரக் குறியீடுகளை நிர்ணயித்துள்ளன. மேற்கண்ட அனைத்து தர நிர்ணயங்களையும், கவனித்து ஏற்றுமதி செய்வது என்பது, இயலாத செயலாக உள்ளது.

தேயிலை ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் பல நிறுவனங்கள், மேற்கண்ட தர நிர்ணயத்தால், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கென்யாவின் போட்டியால், இந்திய ஏற்றுமதியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், தர நிர்ணயம் என்ற காரணிகளால், நாட்டின் தேயிலை ஏற்றுமதி துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது என, சேத்தன் பட்டேல் மேலும் கூறினார்.

இந்தியா சராசரியாக, ஆண்டுக்கு, 21-21.50 கோடி கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி, 21.44 கோடி கிலோவாக இருந்தது. இது, சென்ற 2012-13ம் நிதியாண்டில், 60 லட்சம் கிலோ அதிகரித்து, 22.05 கோடி கிலோவாக உயர்ந்தது. ஏற்றுமதி குறைந்துள்ளதால், உள்நாட்டு சந்தையில், தேயிலையின் விலை குறையத் துவங்கியுள்ளது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரைஆண்டிலும், தேயிலை ஏற்றுமதி குறையும் நிலையில், உள்நாட்டில், தேயிலை அளிப்பு மேலும் அதிகரிக்கும். இதனால், உள்நாட்டில், இதன் விலை மேலும் சரிவடையும் என, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் இருந்து, தேயிலை ஏற்றுமதி, அதிகரிக்கும் என, மெக்லியட் ரசல் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர், அஸம் மேசகனம் தெரிவித்தார்.கடந்த 2012ம் ஆண்டில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 112.60 கோடி கிலோவாக இருந்தது. 2 கோடி கிலோதேயிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாண்டில், உள்நாட்டில் தேயிலை பயன்பாடு, 89.50 கோடி கிலோவாகவும், ஏற்றுமதி, 20.10 கோடி கிலோவாகவும் இருந்தது.

Leave a Reply