தோல் பொருட்கள்

தோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.7,307 கோடியாக வளர்ச்சி

நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 13.96 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6,412 கோடி ரூபாயிலிருந்து, 7,307 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது என, மத்திய வர்த்தக ஆய்வு மற்றும் புள்ளியியல் இயக்குனரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கீட்டு காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 10.25 சதவீதம் அதிகரித்து, 119 கோடி டாலரிலிருந்து, 131 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்ததால், வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதம் அல்லது, 8,820 கோடி டாலராக மிகவும் அதிகரித்திருந்தது.

நடப்பு நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்,3.8 சதவீதம் அல்லது 7,000 கோடி டாலராக குறைக்க, மத்திய நிதி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்து உள்ளது. இந்நிலையில், நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, சிறப்பான அளவில் அதிகரித்து உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பதப்படுத்தப்பட்ட தோல் ஏற்றுமதி, கடந்த ஆண்டின், இதே காலாண்டை விட, 8.78 சதவீதம் அதிகரித்து, 1,636 கோடியிலிருந்து, 1,780 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.

கணக்கீட்டு காலாண்டில்,தோல் காலணிகள் ஏற்றுமதி,9.84 சதவீதம் அதிகரித்து,2,118 கோடியிலிருந்து,2,326 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே போன்று, காலணிகளுக்கான உதிரி பாகங்கள் ஏற்றுமதி, 32.15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 333 கோடி ரூபாயிலிருந்து, 440 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது.

தோல் ஆடைகள் ஏற்றுமதி, 5.94 சதவீதம் உயர்ந்து,614 கோடியிலிருந்து, 650 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இதர தோல் பொருட்கள் ஏற்றுமதி,17.04 சதவீதம் அதிகரித்து, 1,437 கோடியிலிருந்து, 1,682 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. விலங்கினங்களுக்கு பயன்படும் தோல் பொருட்கள் ஏற்றுமதி, 26.10 சதவீதம் உயர்ந்து, 140 கோடியிலிருந்து, 177 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

தோல் பொருட்கள் சாராத காலணிகள் ஏற்றுமதி, 87.89 சதவீதம் வளர்ச்சி கண்டு, 134 கோடியிலிருந்து, 253 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், நடப்பு நிதிஆண்டின் துவக்கத்தில் இருந்து, டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு சரிவடைந்து வருவதும், இத்துறையின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளது.

Leave a Reply