வணிகச் செய்திகள்

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மருந்து துறையில், அன்னிய நேரடி முதலீடு இரண்டு மடங்கு அதிகரித்தது

இந்தியாவில் மருந்து துறைக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, இத்துறையில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஏப்ரல் – டிசம்பர்) இந்திய மருந்து துறை நிறுவனங்கள் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு இரண்டு மடங்கு அதிகரித்து 126 கோடி டாலராக உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் இது 58.90 கோடி டாலராக இருந்தது. தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது.

விதிமுறைகள்

இந்திய மருந்து நிறுவனங்களை கையகப்படுத்துவதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது. அதேசமயம், மத்திய அமைச்சரவை இதை நிராகரித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் புதிதாக மருந்து கம்பெனிகளை தொடங்க 100 சதவீத முதலீட்டை நேரடியாக மேற்கொள்ளலாம். அதேசமயம், ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கும் மருந்து நிறுவனங்களில் முதலீடு செய்ய அன்னிய முதலீட்டு மேம்பாட்டு குழுவின் (எஃப்.ஐ.பி.பீ) அனுமதியை பெற வேண்டும்.

நம் நாட்டைச் சேர்ந்த அகிலா ஸ்பெஷாலிட்டிஸ் நிறுவனம் ஜெனரிக் டிரக்ஸ் எனப்படும் பொதுப் பண்பு அடிப்படையிலான மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக ரூ.5,168 கோடி முதலீடு செய்வதற்கு அமெரிக்காவை சேர்ந்த மைலான் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள்

இந்திய மருந்து நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்துவதால் உள்நாட்டில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த 2013 ஏப்ரல் வரையிலான 13 மாதங்களில் மருந்து துறையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டில் 96 சதவீதம் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய திட்டங்களில் முதலீடு அதிகரிப்பதால் உள்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மருந்து துறையிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உலக அளவில் மருந்து துறையில் அதிவேக வளர்ச்சி கண்டு வரும் டாப் ஐந்து நாடுகளில் இந்தியா ஒன்றாகும். 2012 முதல் 2016–ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் மருந்து துறையில் ஆண்டுக்கு சராசரியாக 14–17 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த 2013–ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 4,655 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதன் வாயிலாக 3.45 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தியாவில் மருந்துகளை குறைந்த செலவில் தயாரிக்க முடியும். இதன் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்து வருகின்றன. மருந்து உற்பத்தியில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது இத்துறையின் சந்தை மதிப்பு 1,200 கோடி டாலராக (ரூ.74,400 கோடி). இது, 2015–ஆம் ஆண்டில் 2,000 கோடி டாலராக (ரூ.1.24 லட்சம் கோடி) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேவைத்துறை

இதுபோன்ற காரணங்களால் முதல் ஒன்பது மாதங்களில் மருந்து துறையில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. இதே காலத்தில் சுற்றுலா, போக்குவரத்து, நிதி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சேவைத் துறை 159 கோடி டாலரையும், மோட்டார் வாகனத்துறை 87.10 கோடி டாலரையும் ஈர்த்துள்ளன. கட்டுமானம் மற்றும் ரசாயனம் ஆகிய துறைகளைகளில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு முறையே 91.40 கோடி டாலர் மற்றும் 49 கோடி டாலராக உள்ளது.

முதல் ஒன்பது மாதங்களில் ஒட்டுமொத்தத்தில் அன்னிய நேரடி முதலீடு 2 சதவீதம் குறைந்து 1,656 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

தொலைத்தொடர்பு

அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக சென்ற ஆண்டு பல்பொருள் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்டு 1–ந் தேதி தொலைத்தொடர்பு உள்ளிட்ட 12 துறைகளில் அன்னிய முதலீட்டு உச்சவரம்பை உயர்த்தியது. எனவே இனிவரும் மாதங்களில் முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் அன்னிய நேரடி முதலீட்டை பெறுவதில் உலகின் முன்னணி மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 2011–12–ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 3,650 கோடி டாலராக இருந்தது. இது 2012–13–ஆம் நிதி ஆண்டில் 2,242 கோடி டாலராக குறைந்தது. நடப்பு நிதி ஆண்டில் இந்த முதலீடு 2,600 கோடி டாலரை தாண்ட வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்பம்

அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பதால் டாலர் வரத்து அதிகரித்து, அதற்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வதுடன் வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply