வணிகச் செய்திகள்

நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 1,874 கோடி டாலராக குறைந்தது

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டின் முதல் பத்து மாதங்களில் (ஏப்ரல்-ஜனவரி) அன்னிய நேரடி முதலீடு சென்ற ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 2 சதவீதம் சரிவடைந்து 1,910 கோடி டாலரிலிருந்து 1,874கோடி டாலராக குறைந்துள்ளது.

சேவைத் துறை

மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவதில் சுற்றுலா, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் உள்ளிட்ட சேவைகளின் பங்கு 55 சதவீதமாக உள்ளது. முதல் பத்து மாதங்களில் 180 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்து இத்துறை முதல் இடத்தில் உள்ளது.

பொருளாதார முன்னேற்றம் மற்றும் மறைமுக வரிவசூல் அதிகரிப்பிற்கு உந்து சக்தியாக திகழும் சேவைத்துறை, அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதிலும் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மருந்து, வாகனம்

அடுத்தபடியாக மருந்துதுறை மற்றும் மோட்டார் வாகனத்துறை ஈர்த்த முதலீடு முறையே 126 கோடி டாலர், 100 கோடி டாலராக உள்ளது. கட்டுமானத்துறையில் அன்னிய நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 96.60 கோடி டாலராக உள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் சிலவகை மோட்டார் வாகனங்கள் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் மாதங்களில் இத்துறையில் அன்னிய நேரடி முதலீடு மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல் பத்து மாதங்களில் மொரிஷியஸ் நாட்டிலிருந்து அதிக அளவில் (411 கோடி டாலர்) அன்னிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சிங்கப்பூரிலிருந்து 367 கோடி டாலரும், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து முறையே 318 கோடி டாலர் மற்றும் 170 கோடி டாலர் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு, நிறுவனங்கள் வெளிநாடுகளில் திரட்டிய கடனை அதிக அளவில் திரும்ப செலுத்தியது போன்ற காரணங்களால் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிகர அன்னியச் செலாவணி வெளியேற்றம் வரலாறு காணாத அளவிற்கு 538 கோடி டாலராக அதிகரித்துள்ளது. எனவே இதனை ஈடுகட்ட அன்னிய நேரடி முதலீட்டை அதிக அளவில் ஈர்க்க வேண்டியது அவசியம் என பொருளியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தொலைத்தொடர்பு

அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக சென்ற ஆண்டு பல்பொருள் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்டு 1-ந் தேதி தொலைத்தொடர்பு உள்ளிட்ட 12 துறைகளில் அன்னிய முதலீட்டு உச்சவரம்பை உயர்த்தியது. இந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க தொடங்கியுள்ளது. ஜனவரி மாதத்தில் அன்னிய நேரடி முதலீடு 1.5 சதவீதம் அதிகரித்து 218 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இனிவரும் மாதங்களில் முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் அன்னிய நேரடி முதலீட்டை பெறுவதில் உலகின் முன்னணி மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 2011-12-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 3,650 கோடி டாலராக இருந்தது. இது 2012-13-ஆம் நிதி ஆண்டில் 2,242 கோடி டாலராக குறைந்தது. நடப்பு நிதி ஆண்டில் இந்த முதலீடு 2,300 கோடி டாலரை தாண்ட வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாலை போக்குவரத்து

தங்கு தடையற்ற பொருளாதார வளர்ச்சிக்கு சாலை போக்குவரத்து, துறைமுகம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நன்றாக இருக்க வேண்டும். 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) இதற்காக 1 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைப்படுகிறது. இதில் குறிப்பிட்ட அளவை வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு வாயிலாக ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்னிய நேரடி முதலீட்டால் டாலர் வரத்து அதிகரித்து ரூபாய் மதிப்பு உயர்வதுடன் வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில் நுணுக்கங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.மேலும் உள்நாட்டு நிறுவனங்களால் அவற்றிற்கு தேவைப்படும் மூலதனத்தை அதிக அளவில் பெற முடியும்.

 

நன்றி தினத்தந்தி

 

Leave a Reply