தங்கம் & ஆபரணங்கள்

நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவடைந்தது

நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 50 சதவீதம் சரிவடைந்து 1,090 கோடி டாலரிலிருந்து 550 கோடி டாலராக குறைந்துள்ளது. உள்நாட்டில் தங்கம் போதுமான அளவிற்கு கிடைக்காததே இதற்கு காரணமாகும்.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

சென்ற 2012-13-ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு 8,820 கோடி டாலராக உயர்ந்தது. தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டதே இதன் பின்னணியாகும். எனவே, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டில் மட்டும் தங்கம் மீதான இறக்குமதி வரி மூன்று முறை உயர்த்தப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை மறு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் ரிசர்வ் வங்கி விதித்தது. இதனால் தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது.

அனைத்திந்திய நவரத்தின மற்றும் ஆபரணங்கள் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ஹரேஷ் சோனி இது குறித்து கூறுகையில், ‘‘ஆபரணங்களை தயாரித்து ஏற்றுமதி செய்வதற்கு தங்கத்தை கொள்முதல் செய்வது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. ஒன்று அல்லது இரண்டு சேமிப்பு கிடங்குகளிலிருந்து மட்டுமே தங்கத்தை எளிதில் வாங்க முடிகிறது’’ என்று தெரிவித்தார்.

வைரம்

தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில், வைரம் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் வைரம் ஏற்றமதி 21 சதவீதம் அதிகரித்து 1,597.77 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில் இந்திய வைரங்களுக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளது என நிபுணர் ஒருவர் தெரிவித்தார். வரும் 2014-15-ஆம் நிதி ஆண்டில் 4,000 கோடி டாலர் மதிப்பிற்கு நவரத்தினம் மற்றும் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக விபுல் ஷா தெரிவித்தார்.

முதல் 10 மாதங்களில் தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி 47 சதவீதம் குறைந்து 229.60 கோடி டாலராக குறைந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், மேற்கு ஆசியா ஆகிய நாடுகளில் இந்திய தங்க நகைகளுக்கு தேவைப்பாடு உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டில் தங்கம் அளிப்பு குறைந்துள்ளதால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நடப்பு 2013-14-ஆம் நிதி ஆண்டில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 10 சதவீதம் குறைந்து 3,400 கோடி டாலராக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற நிதி ஆண்டில் இது 3,900 கோடி டாலராக இருந்தது.

கட்டுப்பாடுகள்

இந்நிலையில், மூன்றாவது காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை மிகவும் குறைந்துள்ளதையடுத்து தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply