அரிசி & சிறுதானியங்கள்

நடப்பு நிதி ஆண்டில் அரிசி கோதுமை ஏற்றுமதி 1.80 கோடி டன்னாக இருக்கும்

நடப்பு நிதி ஆண்டில், அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதி 1.80 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்ற நிதி ஆண்டில் ஏற்றுமதி 2.20 கோடி டன்னாக உயர்ந்திருந்தது. மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை நீக்கியதை அடுத்து ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டோடு நிறைவடையும் இரண்டு ஆண்டுகளில் ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவிற்கு 4 கோடி டன்னாக இருக்கும் என வேளாண்மை செலவினம் மற்றும் விலை ஆணையத்தின் தலைவர் குல்டி தெரிவித்தார்.

சர்வதேச அளவில் அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் பருவமழை நன்றாக இருந்ததால் வரலாறு காணாத அளவிற்கு தானிய உற்பத்தி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கையிருப்பு அதிகளவில் உள்ளது மற்றும் உணவு விலை பணவீக்கத்தை குறைக்கும் வகையிலும் கையிருப்பில் உள்ள தானியங்களில் 2 கோடி டன்னை பொது சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அரிசி ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் இதுவரை முன்னணியில் இருந்த தாய்லாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் தாய்லாந்து கையிருப்பை காலி செய்யும் நோக்கில் ஏற்றுமதி செய்வதால் சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ளது. கோதுமை ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. நம்நாட்டில் இருந்து கோதுமை இறக்குமதி செய்வதால் ஏற்படும் செலவினம் குறைவாகவே இருப்பதே இதற்கு காரணமாகும்.

Leave a Reply