அரிசி & சிறுதானியங்கள்

நடப்பு நிதி ஆண்டில், அரிசி ஏற்றுமதி 7.8% உயர்ந்து 1.10 கோடி டன்னாக உயரும்

நடப்பு நிதி ஆண்டில் அரிசி ஏற்றுமதி 7.8 சதவீதம் உயர்ந்து 1.10 கோடி டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரியாணிக்கு அதிகம் பயன்படுத்தப்படும் பாசுமதி அரிசி 40 லட்சம் டன்னாகவும், சாதாரண அரிசி 70 லட்சம் டன்னாகவும் இருக்கும் என தெரிகிறது. சாதாரண அரிசி ஏற்றுமதி 4 சதவீதம் உயரும் என்றும், பாசுமதி ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இந்திய அரிசிக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.

இந்தியா 2–வது இடம்

சர்வதேச அளவில் அரிசி உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்து வருகின்றன. எனினும் அரிசி ஏற்றுமதியில் நீண்ட காலமாக தாய்லாந்து நாடு முதலிடத்தில் இருந்து வந்தது. அண்மைக் காலத்தில் இந்தியாவிற்கும், தாய்லாந்திற்கும் அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தைப் பிடிப்பதில் கடும் போட்டி இருந்து வருகிறது. இந்தியாவின் அரிசி தரமானதாக இருப்பதுடன், விலையும் நியாயமாக உள்ளதாக சர்வதேச இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடையும் வேளாண் பருவத்தில் நம் நாட்டில் அரிசி உற்பத்தி 10.63 கோடி டன்னாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2011–12 பருவத்தில் (ஜூலை – ஜூன்) அதிகபட்சமாக 10.53 கோடி டன் அரிசி உற்பத்தியாகி இருந்தது. உற்பத்தி அதிகமாகி வருவதால் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.

ஈரான், சவூதி அரேபியா

ஈரான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பாசுமதி அரிசியை இந்தியாவிலிருந்து அதிககளவில் இறக்குமதி செய்கின்றன. டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் ஈரானுக்கு 12.80 லட்சம் டன் பாசுமதி ஏற்றுமதியாகியுள்ளது. ஈரான் நாடு நம்மிடம் ஆண்டுக்கு 15 லட்சம் டன் பாசுமதி இறக்குமதி செய்கிறது. இந்த வகையில் நமது ஏற்றுமதியில் அந்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது. சர்வதேச சந்தைக்கு வரும் பாசுமதி அரிசியில் இந்தியாவின் பங்கு 65 சதவீதமாகும்.

Leave a Reply