ஜவுளி & ஆயத்த ஆடைகள்

நடப்பு நிதி ஆண்டில் ஜவுளி ஏற்றுமதி இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்படும்

நடப்பு நிதி ஆண்டில் ஜவுளி ஏற்றுமதி இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்படும் என இத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நடப்பு நிதி ஆண்டில் 4,300 கோடி டாலர் அளவிற்கு ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிதி ஆண்டில் இது 4,200 கோடி டாலராக இருக்கும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கே.எஸ்.ராவ் தெரிவித்தார். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் ஜவுளி ஏற்றுமதி 100 கோடி டாலர் குறையும்.

2012–13–ஆம் நிதி ஆண்டில் ஜவுளித்துறை ஏற்றுமதி 3,400 கோடி டாலராக இருந்தது. எதிர்வரும் நிதி ஆண்டில் 6,000 கோடி டாலர் அளவிற்கு ஜவுளித்துறை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழும் துறைகளில் ஜவுளித் துறையும் ஒன்றாகும். இத்துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 கோடி பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

நமது முக்கிய ஏற்றுமதி சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட தொடங்கியுள்ளதால் இந்தியாவின் ஜவுளித்துறை ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் நிதி ஆண்டுகளில் ஏற்றுமதி இலக்கு எட்டப்படும் என நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply