ஏற்றுமதி செய்திகள்

நடப்பு 2013~14 ஆம் நிதி ஆண்டில் இலக்கை காட்டிலும் ஏற்றுமதி 1,000 கோடி டாலர் குறையும்

சர்வதேச அளவில் தேவைப்பாடு குறைந்துள்ளதாலும், உள்நாட்டில் உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாலும், நடப்பு நிதி ஆண்டில் இலக்கை காட்டிலும் ஏற்றுமதி 1,000 கோடி டாலர் குறையும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு (எஃப்.ஐ.இ.ஓ) தெரிவித்துள்ளது.

மந்தநிலை

இந்த நிதி ஆண்டில் 32,500 கோடி டாலருக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த இலக்கை எட்டுவது கடினம் என்றும், ஏற்றுமதி சுமார் 31,500 கோடி டாலராக இருக்கும் என்றும் எஃப்.ஐ.இ.ஓ. தலைவர் ரஃபீக் அஹமது தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மந்தநிலையால் கடந்த 2012–13–ஆம் நிதி ஆண்டில் சரக்குகள் ஏற்றுமதி அதற்கு முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 1.8 சதவீதம் குறைந்து 30,040 கோடி டாலராக குறைந்தது. இதனையடுத்து நடப்பு கணக்கு பற்றாக்குறை எப்போதும் இல்லாத அளவிற்கு 8,820 கோடி டாலராக உயர்ந்தது.

அமெரிக்க பொருளாதாரம்

இந்நிலையில் அமெரிக்க பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதால் இந்த நிதி ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே நடப்பு நிதி ஆண்டில் இலக்கை காட்டிலும் ஏற்றுமதி 100 கோடி டாலர் அதிகரித்து 32,600 கோடி டாலராக உயரும் என நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தபோது தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டில் முதல் 10 மாதங்களில் (ஏப்ரல்–ஜனவரி) ஏற்றுமதி 5.71 சதவீதம் அதிகரித்து 25,700 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது இலக்கை காட்டிலும் 6,800 கோடி டாலர் குறைவாகும். நிதி ஆண்டு நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. எனவே முழு ஆண்டிற்கான இலக்கு எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுங்கவரி

ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருள்களுக்கு விதிக்கப்படும் சுங்கவரியில் குறிப்பிட்ட சதவீதம் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ரீஃபண்டாக வழங்கப்படுகிறது. இந்த ரீஃபண்டு பாக்கி ரூ.12,000 கோடியாக உயர்ந்துள்ளதாக ஏற்றுமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து இந்நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அஹமது தெரிவித்தார். இந்த பிரச்சினைக்கும் தீர்வு காணும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

அடிப்படை கட்டமைப்பு வசதி

சாலை போக்குவரத்து, துறைமுக வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நன்றாக இல்லாததாலும், போக்குவரத்து கட்டணங்கள் அதிகமாக உள்ளதாலும் ஏற்றுமதி வளர்ச்சி வேகம் குறைந்து வருகிறது என்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்றும் அஹமது மேலும் தெரிவித்தார்.

பாரத ரிசர்வ் வங்கி

உற்பத்தி துறை நன்றாக இருந்தால்தான் சரக்குகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முடியும். பாரத ரிசர்வ் வங்கி 2013 செப்டம்பர் மாதத்திலிருந்து இதுவரை நான்கு முறை பணக்கொள்கை ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மூன்று முறை முக்கிய கடன்களுக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உற்பத்தி துறை பாதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் உற்பத்தி துறையில் பின்னடைவு (–1.6 சதவீதம்) ஏற்பட்டுள்ளது. எனவே ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது ஏற்றுமதி நிறுவனங்களின் கோரிக்கையாக உள்ளது.

தங்கம் இறக்குமதி

தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் சரக்குகள் இறக்குமதி 7.81 சதவீதம் குறைந்து 37,700 கோடி டாலராக குறைந்துள்ளது. இதனையடுத்து வர்த்தக பற்றாக்குறை 12,000 கோடி டாலராக குறைந்துள்ளது. எனவே இந்த நிதி ஆண்டில் (2013–14) நடப்பு கணக்கு பற்றாக்குறை 4,500 கோடி டாலராக குறையும் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்ற நிதி ஆண்டைக் காட்டிலும் 49 சதவீதம் குறைவாகும்.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply