மருந்து பொருட்கள்

நடப்பு 2014 -15-ஆம் நிதி ஆண்டில் நிர்ணயித்த இலக்கை காட்டிலும் மருந்து ஏற்றுமதி குறையும்

சென்ற 2013 – 14  – ஆம் நிதி ஆண்டில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மருந்து ஏற்றுமதி வளர்ச்சி 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, நடப்பு 2014 – 15 – ஆம் நிதி ஆண்டில் மருந்து ஏற்றுமதி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை (2,500 கோடி டாலர்) காட்டிலும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் காப்புரிமை சட்டங்கள் குறித்து அமெரிக்காவின் எதிர்ப்பே இதற்கு முக்கிய காரணமாகும்.

அமெரிக்காவின் பங்கு

மருந்து ஏற்றுமதி 2012 – 13 – ஆம் நிதி ஆண்டில் 1,466 கோடி டாலராக இருந்தது. இது, 2013 – 14 – ஆம் நிதி ஆண்டில் 1.2 சதவீதம் மட்டுமே அதிகரித்து 1,484 கோடி டாலராக உள்ளது.

நம் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குதான் அதிக அளவில் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மொத்த மருந்து ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 25 சதவீதமாக உள்ளது.

சர்வதேச அளவில் நிலவி வரும் போட்டி மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் மருந்து ஏற்றுமதி வளர்ச்சி குறைந்துள்ளது என்று பார்மெக்சில் அமைப்பின் செயல் இயக்குனர் பி.வி.அப்பாஜி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பேயர் நிறுவனத்தின் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ‘நெக்சாவர்’ மருந்தை தயாரிப்பதற்கும், குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த நாட்கோ பார்மா நிறுவனத்துக்கு கட்டாய உரிமச் சட்டத்தின் கீழ் கடந்த 2012 – ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு அமெரிக்க மருந்து நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், வியட்நாம் அரசும் இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் என்ற அச்சப்பாடு நிலவுகிறது.

குறைந்த விலையில்…

குறைந்த விலையில் தரமான மருந்துகளை ஏற்றுமதி செய்வது சர்வதேச அளவில் இந்தியா தனது அந்தஸ்தை நிலைநிறுத்தும் என்றும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடப்பு நிதி ஆண்டில் ஏற்றுமதி 12 சதவீதம் உயரும் என்றும் அப்பாஜி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply