ஜவுளி & ஆயத்த ஆடைகள்

நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி 1,700 கோடி டாலராக அதிகரிக்கும்

நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1,700 கோடி டாலராக (1.02 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும். இது, கடந்தாண்டு 1,300 கோடி டாலராக (78 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது என, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள, பென் பிளாசா வர்த்தக வளாகத்தில், சர்வதேச ஆடைகள் கண்காட்சி நடை பெற்று வருகிறது.இக்கண்காட்சியில் பத்திரிகையாளர்களிடம் சக்திவேல் கூறியதாவது: நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரையிலுமாக, இந்திய ஆடைகள் ஏற்றுமதி, 14 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாட்டின் ஆடைகள் ஏற்றுமதி துறை மிகவும் மந்தமாக இருந்தது.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக, ஆடைகள் ஏற்றுமதி விறுவிறுப்படைந்துள்ளது. எனவே, அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவின் ஆடைகள் ஏற்றுமதி, 1,700 கோடி டாலரை எட்டும். இந்தியாவிற்கு கடும் போட்டி நாடாக, திகழ்ந்த சீனாவில், கடந்த ஓராண்டாக உற்பத்தி செலவினம் கடுமையாக உயர்ந்துள்ளது. இது, இந்திய ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. இவ்வாறு சக்திவேல் தெரிவித்தார்.

Leave a Reply