இரும்பு தாது & உலோகம்

நாட்டின் உருக்கு பயன்பாடு 2.41 கோடி டன்னாக உயர்வு

நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் நான்கு மாத காலத்தில், இந்தியாவின் உருக்கு பயன்பாடு, 2.41 கோடி டன்னாக அதிகரித்து உள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 2.40 கோடி டன்னாக இருந்தது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் உருக்கு பயன்பாடு, 0.2 சதவீதம் அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது என, மத்திய உருக்கு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொருளாதார மந்த நிலையால், மோட்டார் வாகனம், கட்டு மானம் உள்ளிட்ட துறைகளில், உருக்கு பயன்பாடு குறைந்து போயுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பருவ நிலை நன்றாக உள்ளதால், வரும் மாதங்களில், உருக்கிற்கான தேவை அதிகரிக்கும் என,  இத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் உருக்கு உற்பத்தி, 3.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.53 கோடி டன்னிலிருந்து, 2.61 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.

உருக்கு தயாரிப்பில் முன்னணியில் உள்ள, செயில், டாட்டா ஸ்டீல் மற்றும் ராஷ்டிரிய இஸ்பத் நிகம் நிறுவனங்களின் உருக்கு உற்பத்தி, 9.6 சதவீதம் உயர்ந்து, 66 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது. மேலும், ஜே.எஸ்.டபிள்யூ மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களின் உருக்கு உற்பத்தி, ஒட்டு மொத்த அளவில், 74 லட்சம் டன்னாக உள்ளது. கணக்கீட்டு காலத்தில், நாட்டின் உருக்கு இறக்குமதி, 36 சதவீதம் சரிவடைந்து, 28 லட்சம் டன்னிலிருந்து, 18 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதே போன்று உருக்கு ஏற்றுமதியும், 14.80 லட்சம் டன்னிலிருந்து, 14.10 லட்சம் டன்னாக சரிவடைந்து உள்ளது.

Leave a Reply