இறக்குமதி செய்திகள்

நாட்டின் தாவர எண்ணெய்இறக்குமதி 40 சதவீதம் சரிவு

நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, சென்ற பிப்ரவரி மாதத்தில், 40 சதவீதம் சரிவடைந்து, 5,78,975 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 9,69,175 டன்னாக உயர்ந்து காணப்பட்டது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், சமையல் எண்ணெயின் பங்களிப்பு, 5,69,544 டன்னாகவும், சமையல் சாரா இதர எண்ணெய் வகைகளின் பங்களிப்பு, 9,431 டன்னாகவும் உள்ளன.கணக்கீட்டு மாதத்தில், கச்சா பாமாயில் இறக்குமதி, 6.70 லட்சம் டன்னிலிருந்து, 2.69 லட்சம் டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.
இதையடுத்து, சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல், நடப்பாண்டு பிப்ரவரி வரையிலான நான்கு மாத காலத்தில், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி, 6 சதவீதம் சரிவடைந்து, 37,35,263 டன்னிலிருந்து, 34,96,807 டன்னாக குறைந்துள்ளது.மார்ச் 1ம் தேதி வரையிலுமாக, நாட்டின் தாவர எண்ணெய் கையிருப்பு, 12.45 லட்சம் டன்னாக உள்ளது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply