இறைச்சி & முட்டை

நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு 7 கோடி முட்டை ஏற்றுமதி

நாமக்கல்லில் இருந்து ஒரே மாதத்தில் 7 கோடி முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை விதித்திருந்த ஓமன் அரசாங்கம் அந்த நாட்டில் முட்டை தேவை அதிகரித்ததால், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய முட்டை இறக்குமதிக்கான தடையை விலக்கி கொண்டது. அந்த நாட்டை சேர்ந்த கால்நடை வல்லுநர்கள் நாமக்கல் பகுதிக்கு நேரில் வந்து பண்ணைகளை ஆய்வு செய்து முட்டை ஏற்றுமதிக்கான ஆர்டர்களை அளித்தனர். இதை தொடர்ந்து அந்த நாட்டுக்கு தினமும் 10 லட்சம் முட்டை வரை ஏற்றுமதியாகிறது.

இதேபோல ஆப்கானிஸ்தான் நாட்டில் குளிர்காலம் துவங்கி உள்ளதால் அந்த நாடு இந்திய முட்டைகளை அதுவும் குறிப்பாக நாமக்கல் முட்டைகளை அதிகளவில் இறக்குமதி செய்ய ஆர்டர் அளித்துள்ளன. இதனால் கடந்த செப்டம்பரில் ஓமன், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடாநாடுகளுக்கு 7.32 கோடி முட்டை ஏற்றுமதியாகி உள்ளது. கடந்த 9 மாதத்தில் செப்டம்பரில் தான் அதிகளவில் முட்டை ஏற்றுமதியாகி உள்ளது. 2012 செப்டம்பரில் நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு 4 கோடி முட்டைகளே ஏற்றுமதியாகி உள்ளன.

இதுகுறித்து முட்டை ஏற்றுமதி நிறுவன மேலாளர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘ஓமன் அரசு தடையை விலக்கி கொண்டதால் அங்கு தற்போது முட்டைகள் செல்கின்றன. வெளிநாடுகளில் குளிர்கால சீசன் தொடங்கி உள்ளதால் முட்டை தேவை அதிகரித்துள்ளது. அக்டோபரில் மட்டும் 10 கோடி முட்டை ஏற்றுமதியாகும்,‘‘ என்றார்.
முட்டை ஏற்றுமதி அதிகரித்து வந்தாலும், தீவன விலை உயர்வால் உற்பத்தி இந்த ஆண்டில் தொடர்ந்து சரிந்து வருகிறது.

Leave a Reply