ஏற்றுமதி செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ஏற்றுமதி குறையும்: ஆனந்த் சர்மா

நடப்பு நிதி ஆண்டில் 32,500 கோடி டாலருக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இலக்கை விட ஏற்றுமதி குறையும் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார். எனினும் கடந்த நிதி ஆண்டை விட ஏற்றுமதி நன்கு அதிகரிக்கும் என்றும், வர்த்தக பற்றாக்குறை கணிசமாக குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வர்த்தக பற்றாக்குறை

ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் சரக்குகள் ஏற்றுமதி 4.79 சதவீதம் அதிகரித்து 28,270 கோடி டாலரை எட்டியுள்ளது. அதே சமயம் இறக்குமதி 8.65 சதவீதம் குறைந்து 41,086 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. இதனையடுத்து வர்த்தக பற்றாக்குறை (சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான வித்தியாசம்) 12,800 கோடி டாலராக குறைந்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் (2012-13) 30,004 கோடி டாலருக்கு சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட 1.8 சதவீதம் குறைவாகும். பொருளாதார மந்தநிலை காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு பொருள்களுக்கான தேவைப்பாடு குறைந்ததால் அந்த ஆண்டில் ஏற்றுமதி சற்றே சரிவு கண்டது. இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் ஏற்றுமதி 31,200 முதல் 31,500 கோடி டாலர் வரை இருக்கும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் ரபீக் அகமது தெரிவித்துள்ளார். இதன்படி சரக்குகள் ஏற்றுமதி, சென்ற ஆண்டைக் காட்டிலும் சுமார் 5 சதவீதம் வளர்ச்சி காண வாய்ப்புள்ளது.

உலக பொருளாதார மந்தநிலை மட்டுமல்லாமல் உள்நாட்டு உற்பத்தித் துறையின் வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவும் ஏற்றுமதி மந்தமடைந்ததற்கு முக்கிய காரணமாக உள்ளது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறியீட்டு எண்ணை தயாரிப்பதில் உற்பத்தித் துறையின் பங்கு 75 சதவீதமாக உள்ளது. டிசம்பர் மாதத்தில் இத்துறையின் உற்பத்தி 1.6 சதவீதம் குறைந்தது. 2012 டிசம்பரில் 0.8 சதவீத அளவிற்கே உற்பத்தி குறைந்திருந்தது.

பரிந்துரைகள்

2014-19 வெளிநாட்டு வர்த்தக கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதில், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கான ஏற்றுமதி இலக்கை நிர்ணயிக்கும்படியும், சில முக்கிய கொள்கை முடிவுகளை அறிவிக்கும்படியும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு மத்திய அரசிடம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் சில பரிந்துரைகள் கொண்ட ஆய்வறிக்கை ஒன்றை தயாரிப்பதிலும் இந்த அமைப்பு தற்போது ஈடுபட்டுள்ளது.

நன்றி தினத்தந்தி

Leave a Reply