இறக்குமதி செய்திகள்

நிலக்கரி இறக்குமதி 9% குறைந்தது

கடந்த அக்டோபர் மாதத்தில் 1.53 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இறக்குமதி 9 சதவீதம் குறைந்துள்ளது. ஹூட் ஹூட் புயலின் கோர தாண்டவம் காரணமாக சில துறைமுகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் நிலக்கரி இறக்குமதி குறைந்ததாக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான எம் ஜங்ஷன் தெரிவித்துள்ளது.

மூன்றாவது இடம்

சர்வதேச அளவில் நிலக்கரி அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்தும் அனல்மின் நிலையங்களின் பங்கு அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். இந்த மாதத்தில் நிலக்கரி இறக்குமதி 1.70 கோடி டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின் உற்பத்தி நிறுவனங்கள் அதிக அளவில் இறக்குமதி ஆர்டர்கள் வழங்கி வருகின்றன. மேலும் சர்வதேச சந்தையில் இப்போது நிலக்கரி விலை குறைந்துள்ளது. இதனால் இறக்குமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனல் மின் நிலையங்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நாட்டிலுள்ள 103 அனல்மின் நிலையங்களில் 61 நிலையங்களில் ஒரு வார மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு இருந்தது. பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவின் நிலக்கரி சப்ளை குறைவாக இருந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் கடும் நிதி நெருக்கடியில் உள்ள சில நிறுவனங்கள் கூட இறக்குமதிக்காக ஆர்டர் வழங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. 2013 அக்டோபர் மாதத்தில் 1.52 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இதனுடன் ஒப்பிடும்போது இந்த அக்டோபரில் இறக்குமதி 1.53 கோடி டன்னாக சற்றே உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 1.69 கோடி டன் நிலக்கரி இறக்குமதி ஆகியிருந்தது.

ஹூட் ஹூட் புயல்

ஆந்திரா மற்றும் ஒரிசாவை தாக்கிய ஹூட் ஹூட் புயலால் ஏறக்குறைய 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பல குடும்பங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றன. புயலால் துறைமுகங்களின் அன்றாட நடவடிக்கைகளிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சில துறைமுகங்களில் நெரிசல் அதிகமானதால் சரக்கு கப்பல் போக்குவரத்து தடைபட்டது போன்ற காரணங்களால் கடந்த மாதத்தில் இறக்குமதி குறைந்தது. அந்த கப்பல்கள் இப்போது துறைமுகங்களுக்கு வரத் தொடங்கியுள்ளன. இதனாலும் நடப்பு மாதத்தில் நிலக்கரி இறக்குமதி அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

கோக்கிங் கோல்

சென்ற அக்டோபர் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 1.53 கோடி டன் நிலக்கரியில் அனல்மின் நிலையங்களுக்கான சாதாரண நிலக்கரி 1.27 கோடி டன்னாக இருந்தது. மீதமுள்ள அளவு உருக்காலைகளில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் உயர்தர நிலக்கரியாக (கோக்கிங் கோல்) இருந்தது.

Leave a Reply