ஏற்றுமதி செய்திகள்

நிலக்கரி ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை?மின் கட்டண சுமை மேலும் அதிகரிக்கும்

இந்தோனேஷிய அரசு, குறைந்த கலோரி கொண்ட நிலக்கரி ஏற்றுமதிக்கு தடை விதிக்க திட்டமிட்டு உள்ளது.இது அமலுக்கு வந்தால், அதிக கலோரி கொண்ட நிலக்கரியை கூடுதல் விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம், இந்திய மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்படும். இதனால், இந்நிறுவனங்கள் விற்கும் மின்சாரத்தின் விலை உயர்ந்து, அது, நுகர்வோரின் மின் கட்டண சுமையை, மேலும் அதிகரிக்க செய்யும்.

அனல் மின் உற்பத்தி: இந்தியாவில், அணு, அனல், புனல், காற்றாலை மற்றும் மரபு சாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. எனினும், நாட்டின் மொத்த மின் உற்பத்தியில், பெரும் பகுதி, நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன.நாட்டின் மின்சார பயன்பாடு பெருகி வருவதற்கேற்ப, அதன் உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும்.

இதற்காக, பல்வேறு மின் உற்பத்தி திட்டங்கள் தீட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.அனல் மின் உற்பத்தியை பொறுத்தமட்டில், அதன் வளர்ச்சி, நிலக்கரியை சார்ந்துள்ளது. ஆனால், தேவைக்கேற்ப நிலக்கரி கிடைக்காததால், அனல் மின் உற்பத்தியின் வளர்ச்சி மந்தமாகவே உள்ளது.

இந்தியாவில், பொதுத் துறையை சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில், 80 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.கடந்த, 2009-10ம் நிதியாண்டில், நாட்டின் நிலக்கரி இறக்குமதி, 7.30 கோடி டன்னாக இருந்தது. இது சென்ற, 2012-13ம் நிதியாண்டில், 13.50 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், நிலக்கரி இறக்குமதி, 33 சதவீதம் உயர்ந்து, 18 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இந்தியா, கிட்டத்தட்ட, 11 கோடி டன் நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது.

இதில், 70 சதவீதம் இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதியாகிறது.வரும், 2017ம் ஆண்டு, நிலக்கரிக்கான தேவை, 98 கோடி டன்னாகவும், உள்நாட்டு வினியோகம், 79.50 கோடி டன்னாகவும் இருக்கும் என, திட்டக் குழு மதிப்பிட்டு உள்ளது.ஆக, பற்றாக்குறையான, 18.50 கோடி டன் நிலக்கரி இறக்குமதிக்கு, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளையே இந்தியா சார்ந்துஇருக்க வேண்டும்.இந்திய அனல் மின் நிறுவனங்கள், இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதியாகும், குறைந்த எரிதிறன் (5,100 கிலோ கலோரி) கொண்ட நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றன.

ஆஸ்திரேலியா: இந்நிலையில், இந்தோனேஷியா, அதன் நீண்ட கால தேவையை கருத்தில் கொண்டு, குறைந்த கலோரி கொண்ட நிலக்கரியின் ஏற்றுமதிக்கு, வரும் 2014ம் ஆண்டு முதல் தடை விதிக்க திட்டமிட்டு உள்ளது.இந்த தடையால், இந்தியா, நிலக்கரியை, ஆஸ்திரேலியாவில் இருந்து கூடுதல் செலவினத்தில் இறக்குமதி செய்ய நேரிடும். இந்தோனேஷியாவை விட, ஆஸ்திரேலியாவிலிருந்து நிலக்கரியை எடுத்து வருவதற்கான சரக்கு கப்பல் போக்குவரத்து செலவினம் அதிகரிக்கும்.இதனால், டாட்டா பவர், அதானி பவர், லான்கோ இன்பிராடெக், ஜி.எம்.ஆர், எஸ்ஸார் பவர், என்.டி.பி.சி., போன்ற மின் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

இந்நிறுவனங்கள், மின்சாரத்தின் விலையை உயர்த்தும். இந்த மின்சாரத்தை வாங்கும் மாநில அரசுகளின் மின் வினியோக வாரியம், அந்த சுமையை, மின் நுகர்வோரின் தலையில் சுமத்தும்.இதன் மூலம், மக்களின் மின் கட்டண சுமை, கிட்டத்தட்ட, 5-20 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.உள்நாட்டில் நிலக்கரிக்கான தேவையை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு, உடனடியாக எடுத்தால் மட்டுமே, எதிர்கால மின் கட்டண பாதிப்பில் இருந்து மக்கள் மீள முடியும்.

Leave a Reply