வணிகச் செய்திகள்

பண்டிகை காலத்தில் விளம்பரங்களுக்காக ரூ.200 கோடி செலவு

ஆன்லைன் நிறுவனங்கள் திட்டம்

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 3 முன்னணி நிறுவனங்கள், எதிர்வரும் பண்டிகை காலத்தில் விளம்பரங்களுக்காக ரூ.200 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இந்தியாவில் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாத இறுதி வரை பல்வேறு பொருள்களின் விற்பனை அதிகரிக்கும். இந்த காலத்தில் மொத்த பொருட்கள் விற்பனையில் பிராண்டட் பொருள்களின் பங்கு 40 சதவீதம் வரை இருக்கும். இந்த வாய்ப்பை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான ஸ்னாப்டீல், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள உத்தேசித்துள்ளன. விற்பனையை அதிகரிக்கும் வகையில் விளம்பரத்திற்காக இந்த 3 நிறுவனங்களும் ரூ.200 கோடிக்கு மேல் செலவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்னாப்டீல் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் வழங்குவதுடன், விற்பனை மேம்பாட்டுக்காக திரைப்பட நடிகர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் சுமார் 50 விளம்பரப் படங்கள் தயாரித்து தேசிய மற்றும் மாநிலங்கள் அளவில் செயல்படும் சுமார் 85 தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக விளம்பரப்படுத்த உள்ளதாக தெரிகிறது.