பருத்தி பஞ்சு & நூல்

பருத்தி விலை உயர்ந்து உள்ளது

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், பருத்திக்கான தேவை அதிகரித்து உள்ளதால், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஒரு கேண்டி (1 கேண்டி=356 கிலோ) பருத்தியின் விலை, 48,500 ரூபாயாக உயர்ந்து உள்ளது.

ஜவுளி ஆலைகள்: உள்நாட்டில் உள்ள ஜவுளி ஆலைகளுக்கு, பருத்திக்கான தேவை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் பருத்தி நூல் இழைக்கான தேவையும் வளர்ச்சி கண்டுள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்துள்ளதால், ஏற்றுமதியாளர்களுக்கு பருத்தி மற்றும் நூலிழை ஏற்றுமதி மூலம், அதிக வருவாய்கிடைக்கிறது.

நடப்பு, 2012-13ம் பருவத்தில், நாட்டின் பருத்தி ஏற்றுமதி, 1 கோடி பொதிகளாக (1 பொதி=170 கிலோ) இருக்கும் என, மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது. இது,சர்வதேச பருத்தி ஏற்றுமதியில், 5ல் ஒரு பங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பேர வர்த்தக சந்தைகளிலும், பருத்தியின் விலை அதிகரித்து உள்ளது. என்.சி.டீ.இ.எக்ஸ்., முன்பேர சந்தையில், அக்டோபர் மாதம் வினியோகம் செய்வதற்கான ஒரு பொதி பருத்தியின் விலை, 20,000- 20,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு மே மாதம் முதல் இதுவரையிலுமாக, ஒரு பருத்தி பொதியின் விலை, 2,000 ரூபாய் உயர்ந்துள்ளது. சீனா, நம் நாட்டிலிருந்து, மிக அதிகளவில் பருத்தி நூலிழைகளை இறக்குமதி செய்து கொள்கிறது.

விலை குறையும்: பருத்திக்கான தேவை அதிகரித்து உள்ள அதே நேரத்தில், பருத்தி அதிகளவில் உற்பத்தியாகும் மாநிலங்களில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், பருத்தி பயிர்கள் பாதிப்படைந்து உள்ளன. இதுவும், விலை உயர்வுக்கு காரணம் என, ஆமதாபாத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.

பருத்திக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், 1 கேண்டி பருத்தியின் விலை, 50 ஆயிரம் ரூபாயை எட்டவும் வாய்ப்புள்ளது. சந்தைக்கு புதிய பருத்தி வரத்து அதிகரிக்கும் நிலையில், இதன் விலை குறைய வாய்ப்புள்ளது என, அந்த வர்த்தகர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply