இறக்குமதி செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி 23 சதவீதம் உயர்ந்தது

பாராளுமன்ற தேர்தல் காரணமாக பயன்பாடு அதிகரித்துள்ளால் கச்சா எண்ணெய் இறக்குமதி பிப்ரவரி மாதத்தில் 23 சதவீதம் உயர்ந்துள்ளது.

வாகன பயன்பாடு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் நம்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. பொதுவாக தேர்தல் காலத்தில் வாகன பயன்பாடு அதிகளவில் இருக்கும். இதன் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 1.64 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 1.34 கோடி டன்னாக இருந்தது. மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் இது தெரியவந்துள்ளது.

சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருள்கள் இறக்குமதி 14 லட்சம் டன்னாக உள்ளது. இதில் சமையல் எரிவாயு இறக்குமதி மட்டும் 6.29 லட்சம் டன்னாக உள்ளது. ஏற்றுமதி 46 லட்சம் டன்னிலிருந்து 52 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. டீசல் ஏற்றுமதி 15 லட்சம் டன்னிலிருந்து 20 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. மேலும் 12 லட்சம் பெட்ரோலும், 4.55 லட்சம் டன் விமான எரிபொருளும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

டீசல் விற்பனை

எரிபொருள் தேவைப்பாடு பிப்ரவரி மாதத்தில் 2.4 சதவீதம் அதிகரித்து 1.29 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இதில் டீசல் விற்பனை அதிக பங்களிப்பை கொண்டுள்ளது. அம்மாதத்தில் டீசல் விற்பனை சென்ற ஆண்டின் இதே மாதத்தைப் போன்று 54 லட்சம் டன்னாக இருந்தது. அதேசமயம், முந்தைய டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் டீசல் விற்பனை குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் பயன்பாடு 12.78 லட்சம் டன்னிலிருந்து 13.79 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு பயன்பாடு 13 லட்சம் டன்னிலிருந்து 14 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

விமான எரிபொருள் விற்பனை 4.28 லட்சம் டன்னிலிருந்து 4.47 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

Leave a Reply