ஏற்றுமதி செய்திகள்

பிப்ரவரியில் ஏற்றுமதி குறைந்துள்ளதால் நடப்பு நிதி ஆண்டிற்கான இலக்கை எட்டுவது கடினம்

பிப்ரவரியில் ஏற்றுமதி குறைந்துள்ளதால் நடப்பு 2013-14-ஆம் நிதி ஆண்டிற்கான ஏற்றுமதி இலக்கை (32,500 கோடி டாலர்) எட்டுவது கடினம் என வெளிநாட்டு வர்த்தக துறையின் தலைமை இயக்குனர் அனுப் பூஜாரி தெரிவித்துள்ளார்.

முதல் 11 மாதங்களில்…

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 3.67 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் ஏற்றுமதி 4.79 சதவீதம் அதிகரித்து 28,270 கோடி டாலராக உள்ளது. இது, இலக்கில் 87 சதவீதமாகும். நிதி ஆண்டு முடிய இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், இலக்கை எட்டுவது சாத்தியமில்லை என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி சுமார் 31,200 கோடி டாலராக இருக்கும் என அனுப் பூஜாரி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்தில் பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதி 10.36 சதவீதம் குறைந்து 491 கோடி டாலராகவும், நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 4.18 சதவீதம் குறைந்து 359 கோடி டாலராகவும் சரிவடைந்துள்ளது.

சரக்குகள் மொத்த ஏற்றுமதியில் பொறியியல் சாதனங்களின் பங்கு 20 சதவீதமாக உள்ளது. பிப்ரவரி மாதத்தில் இவற்றின் ஏற்றுமதி 2.7 சதவீதம் குறைந்து 502 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இந்தியாவின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின் பங்கு 50 சதவீதமாக உள்ளது. அந்த நாடுகளில் தேவைப்பாடு குறைந்துள்ளதால் பிப்ரவரி மாதத்தில் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.

கடனிற்கான வட்டி விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி துறை தொடர்ந்து மந்தமாக உள்ளது. பிப்ரவரியில் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி குறைந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். எனினும், நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 8.96 சதவீதம்  அதிகரித்து 5,550 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.

வர்த்தக பற்றாக்குறை

பிப்ரவரியில் ஒட்டுமொத்தத்தில் சரக்குகள் ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில், இறக்குமதி 17.09 சதவீதம் குறைந்ததையடுத்து, ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு வர்த்தக பற்றாக்குறை 813 கோடி டாலராக குறைந்துள்ளது.

நன்றி தினத்தந்தி

Leave a Reply