வணிகச் செய்திகள்

பிப்ரவரி மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்களின் கடன்பத்திர முதலீடு ரூ.11,337 கோடி

பிப்ரவரி மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.11,337 கோடி மதிப்பிற்கு கடன்பத்திரங்களை வாங்கியுள்ளன. 2013–ஆம் ஆண்டில், இந்நிறுவனங்கள் ரூ.50,847 கோடி அளவிற்கு கடன்பத்திரங்களை விற்பனை செய்திருந்தன.

சிறப்பு பண அளிப்பு

அமெரிக்க ரிசர்வ் வங்கி உள்நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் பொதுமக்களிடம் இருந்து மாதந்தோறும் 8,500 கோடி டாலர் அளவிற்கு கடன்பத்திரங்களை வாங்கி வந்தது. 2013 மே மாதத்தில் அந்த வங்கி சிறப்பு பண அளிப்பு நடவடிக்கையை குறைக்கும் என்ற ஊகத்தால் அம்மாதத்திலிருந்து அன்னிய நிதி நிறுவனங்கள் கடன்பத்திரங்களிலிருந்து முதலீட்டை விலக்கி வந்தன.

இந்நிலையில், அமெரிக்க பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படத் தொடங்கியதையடுத்து ஜனவரி மாதத்தில் கடன்பத்திரங்கள் வாங்கும் அளவை அந்நாட்டு ரிசர்வ் வங்கி 7,500 கோடி டாலராக குறைத்தது. பிப்ரவரி மாதத்தில் மேலும் 1,000 கோடி டாலர் அளவிற்கு சிறப்பு பண அளிப்பு நடவடிக்கையை குறைத்தது.

இதன் காரணமாக அன்னிய நிதி நிறுவனங்களுக்கு கிடைக்கும் நிதி ஆதாரம் குறைந்துள்ளது. எனவே, வளர்ந்து வரும் நாடுகளில் இந்நிறுவனங்கள் முதலீட்டை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய கடன்பத்திரங்களில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக (ஜனவரி, பிப்ரவரி) முதலீட்டை அதிகரித்துள்ளன.

சென்ற மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.27,657 கோடிக்கு கடன்பத்திரங்களை வாங்கின. ரூ.16,320 கோடிக்கு விற்பனை செய்தன. இதனையடுத்து, நிகர முதலீடு ரூ.11,337 கோடியாக உள்ளது. இது, ஜனவரி மாதத்தில் ரூ.12,609 கோடியாக இருந்தது. அதேசமயம், சென்ற மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குகளில் ரூ.1,404 கோடி அளவிற்கே முதலீடு மேற்கொண்டுள்ளன.

இந்திய பங்குச் சந்தைகளின் வளர்ச்சியில் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 2013–ஆம் ஆண்டில் அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குகள் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.1.13 லட்சம் கோடியாகும்.

ஆட்சி அமைக்கும் கட்சி

பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. புதிதாக ஆட்சி அமைக்கும் கட்சி பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் விரைந்து நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது

Leave a Reply