வணிகச் செய்திகள்

புதிய வரிகள் இ‌ல்லை ! சுங்கவரி குறைப்பு ! தேர்தல் மையமாக வைத்து இடைக்கால பட்ஜெட் தாக்கல்!!

புதுடில்லி : விரைவில் பார்‌லிமென்ட் தேர்தல் வர இருப்பதையொட்டி, தேர்தலை கருத்தில் கொண்டு புதிய வரிகள் எதுவும் இல்லாமல், சிறியரககார்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு சுங்கவரியை குறைத்து இடைக்கால பட்‌ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசுகையில், ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி, உணவு பொருளுக்கான பணவீக்கம் அதிகரித்தது நாட்டின் வளர்ச்சியை சற்று பாதித்தது. இருப்பினும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுத்த சில நடவடிக்கைகளால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் உணவுக்கான பணவீக்கம் கவலை அளிக்கிறது. சர்வதேச பொருளாதார பாதிப்பு இந்தியாவை பாதிக்கவில்லை. மற்ற வளரும் நாடுகளை காட்டிலும், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தை அசைத்து பார்க்க யாரையும் அனுமதிக்க முடியாது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றார்.

நாட்டின் வளர்ச்சி 5.2 சதவீதமாக இருக்கும்

2013-14ம் ஆண்டில், நிதி பற்றாக்‌குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதமாகவும், நடப்பு கணக்கு பற்றாக்குறை 45 பில்லியன் டாலராகவும் இருக்கும். மேலும் நடப்பாண்டு இறுதிக்குள் நாட்டின் வளர்ச்சி 5.2 சதவீதம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அந்நிய செலாவணி கையிருப்பு 15 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

10 ஆண்டுகளில் நாடு 6.2 சதவீதம் வளர்ச்சி

கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நாட்டின் வளர்ச்சி 6.2 சதவீதமாக உள்ளது. முதல் ஐந்தாண்டு காலத்தில் 8.4 சதவீதமும், இரண்டாம் ஐந்தாண்டு காலத்தில் 6.6 சதவீதமும் இருந்தது.

ஏற்றுமதி அதிகரிப்பு

நடப்பாண்டில் வர்த்தக ரீதியாக நாட்டின் ஏற்றுமதி 6.8 சதவீதம் உயர்ந்து 326 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

4 மெகா சூரிய சக்தி திட்டம்

சூரிய சக்தி மின்திட்டத்தின் கீழ் புதிதாக 4 மெகா சூரிய மின்சக்தி திட்டம் துவக்கப்பட உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் நிதி

வடகிழக்கு மாநிலங்களை வர்ச்சி பெற செய்யும் விதமாக இந்த பட்ஜெட்டில் ரூ.1200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்திற்கு கூடுதல் கடன்

நாட்டின் உணவு உற்பத்தி 263 மில்லியன் டன்னாக அதிகரித்து சாதனை படைத்துள்ளது. விவசாயக்கடன் 45 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2012-13-ல் இது 41 பில்லியன் டாலராக இருந்தது. மேலும் 2014 ஜனவரிக்குள், 296 திட்டங்கள் சுமார் ரூ.6.60 லட்சம் கோடி மதிப்பீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரம் வருவமாறு…

* சென்னை-பெங்களூரு, பெங்களூரு-மும்பை, அமிர்தரஸ்-கோல்கட்டா ஆகிய 3 இடங்களில் தொழில் பாதை அமைக்க நடவடிக்க‌ை.

* இந்த ஆண்டு மட்டும் கல்விக்கான தரத்தை மேம்படுத்த ரூ.79,251 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

* வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1200 கோடி வழங்கப்பட உள்ளது.

* 2.1 கோடி சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை மூலம் ரூ.3,370 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆதார் திட்டத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* நிர்பயா திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்

* ரயில்வே துறைக்கு ரூ.29 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* உணவு, விவசாயம் மற்றும் எரிவாயுக்கான மானியத்திற்கு ரூ.2,46,397 ‌ஒதுக்கீடு

* தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவுக்கான மானியத்திற்கு ரூ.1.15 லட்சம் கோடி ஒதுக்கீடு

* நாட்டின் பாதுகாப்பு துறைக்கு நிதி ஒதுக்கீடு 10 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.2.24 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* கிராமப்புற வீடுகளுக்கான திட்டத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடியும், நகர்ப்புற வீடுகளுக்கான திட்டத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

* சிறுபாண்மையினருக்கு ரூ.3,711 கோடியும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி

* சமூகநீதித்துறைக்கு ரூ.6,730 கோடியும், பஞ்சாயத்து துறைக்கு ரூ.7 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

* 2009 மார்ச் 31ம் தேதிக்கு முன்னர் கல்விகடன் வாங்கிய மாணவர்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 9 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

* ஏற்றுமதியை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கை

* சரக்குகள் மற்றும் அதற்கான சேவை வரியில் முன்னேற்றம் கொண்டு வர முடியாதது வருத்தம் அளிக்கிறது.

* கடந்த 10 ஆண்டுகளில் 140 மில்லியன் மக்கள் வறுமை கோட்டிலிருந்து விடுபட்டுள்ளனர்.

* கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் மின் உற்பத்தி 2,34,600 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.

‌* அரிசிக்கான சேவை வரி நீக்கம்

* இரத்த வங்கிக்கு சேவை வரி முழுவதுமாக நீக்கம்

* மொபைல்போனுக்கான சென்வாட் 6 சதவீதம்

வரிவிதிப்பில் மாற்றம் இல்லை

வருமான வரி விதிப்பு உள்ளிட்ட வரிவிதிப்பில் எந்த மாற்றம் செய்யப்படுவில்லை, மேலும் புதிய வரிகள் எதுவும் கொண்டு வரப்படவில்லை.

சுங்க வரி குறைப்பு

தொழில் துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் சுங்கவரி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் துறைக்கு சாதகம்

கடந்தாண்டு ஆட்டோமொபைல் துறை மிகவும் மந்தமாக இருந்தது. இந்நிலையில் இந்த பட்ஜெட் ஆட்டோமொபைல் துறைக்கு கொஞ்சம் சாதகமாக அமைந்துள்ளது. குறிப்பாக சிறியரக கார்கள், கனரக வாகனங்களுக்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன் விபரம்…

* விளையாட்டு துறை சம்பந்தப்பட்ட காருக்கான சுங்கவரி 30 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக குறைப்பு

* மோட்டார் சைக்கிள், சிறிய ரக கார்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கான சுங்கவரி 12 சதவீத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பு

திட்டச்செலவு ரூ.5.55 லட்சம் கோடி

2014-15ம் ஆண்டுக்கான மொத்த திட்டச் செலவு மதிப்பீடு ரூ.5,55,322 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் நிதி பற்றாக்குறை 4.6 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply