ஏற்றுமதி செய்திகள்

புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் ஏற்றுமதியை அதிகரித்து உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சேவைகள்

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய அரசு பொறுப்பு ஏற்றதும் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் ஐந்து ஆண்டு காலத்திற்கான (2014–19) வெளிநாட்டு வர்த்தக கொள்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் சேவைகள் ஏற்றுமதி மற்றும் உயர் தொழில்நுட்ப பொருள்கள் ஏற்றுமதியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய வர்த்தக அமைச்சகத்திற்கு ஆலோசனை தெரிவித்துள்ளதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் அஜய் சகாய் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி ஜனவரி மாதத்தைக் காட்டிலும் 5.5 சதவீதம் குறைந்து 1,316 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

வேலைவாய்ப்பு

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறையின் பங்கு 65 சதவீதமாக உள்ளது. மேலும், வேலைவாய்ப்பு அளிப்பதில் 35 சதவீதமாகவும், நாட்டின் மொத்த வர்த்தகத்தில் 25 சதவீதமாகவும் இத்துறையின் பங்களிப்பு உள்ளது. எனவே, சேவைகள் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது மாதமாக மார்ச்சில் சரக்குகள் ஏற்றுமதி 3.15 சதவீதம் குறைந்து 2,958 கோடி டாலராக உள்ளது. கடந்த 2013–14–ஆம் ஆண்டில் ஏற்றுமதி 31,235 கோடி டாலராக உள்ளது. இது, அந்த நிதி ஆண்டிற்கான இலக்கை காட்டிலும் 1,265 கோடி டாலர் குறைவாகும். 2011–12 மற்றும் 2012–13–ஆம் நிதி ஆண்டுகளில் ஏற்றுமதி முறையே 30,700 கோடி டாலர் மற்றும் 30,040 கோடி டாலராக இருந்தது. ஆக, கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்றுமதி 31,000 கோடி டாலருக்கும் குறைவாகத்தான் இருந்து வருகிறது.

மார்ச் மாதத்தில் ஏற்றுமதி குறைந்ததையடுத்து வர்த்தக பற்றாக்குறை ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு 1,051 கோடி டாலராக உயர்ந்துள்ளது. எனினும், 2013–14–ஆம் நிதி ஆண்டில் இந்த பற்றாக்குறை 27 சதவீதம் சரிவடைந்து 13,859 கோடி டாலராக குறைந்துள்ளது. அந்த நிதி ஆண்டில் அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை 3,500 கோடி டாலராக குறைந்து இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் ஆகும்.

2012–13–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை எப்போதும் இல்லாத அளவிற்கு 8,820 கோடி டாலராக உயர்ந்தது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாகும்.

ரூபாய் மதிப்பு

நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்தால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என பொருளியல் நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

நடப்பு 2014–ஆம் ஆண்டில் ஏற்றுமதி 10 சதவீதம் உயரும்

நடப்பு 2014–ஆம் ஆண்டில் சரக்குகள் ஏற்றுமதி குறைந்தபட்சம் 10 சதவீதம் அதிகரிக்கும் என இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இக்கூட்டமைப்பின் தலைவர் ரஃபீக் அஹமது இது குறித்து கூறுகையில், ‘‘உலக வர்த்தகத்தில் ஏற்படும் வளர்ச்சியைக் காட்டிலும் இந்தியாவின் ஏற்றுமதியில் இரண்டு மடங்கிற்கு மேல் வளர்ச்சி ஏற்படும்’’ என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டில் சர்வதேச அளவில் வர்த்தகத்தில் 4.7 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவின் ஏற்றுமதி 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளது.

கடந்த 2005–ஆம் ஆண்டு முதல் 2013–ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் உலக வர்த்தகத்தில் சராசரியாக 7.35 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டது. இதே காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி சராசரியாக 15.66 சதவீதம் உயர்ந்தது.

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2013–14–ஆம் நிதி ஆண்டில் 4 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. நடப்பு 2014–15–ஆம் நிதி ஆண்டில் ஏற்றுமதியை 15 சதவீதம் அதிகரித்து 36,000 கோடி டாலராக உயர்த்தும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என ரஃபீக் அஹமது மேலும் கூறினார்.

Leave a Reply